பெங்களூரு: மேகேதாட்டுவில் புதிய அணை கட்டுவதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர் மேதா பட்கர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கர்நாடக நிலம் மற்றும் நீர் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் பெங்களூருவில் நடைபெற்ற கூட்டத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர் மேதா பட்கர் பங்கேற்றார். பின்னர் அவர் கூறியதாவது:
காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பில் 5 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் 67 டிஎம்சி நீரை தேக்கும் அளவுக்கு புதிய அணை கட்டுவதற்கான திட்ட வரைவு அறிக்கையை கர்நாடக அரசு மத்திய அரசிடம் தாக்கல் செய்துள்ளது. ஆளும் பாஜக, எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், மஜத ஆகியவை தங்களின் வாக்கு வங்கி அரசியலுக்காக இந்த திட்டத்தை செயல்படுத்த முயற்சித்து வருகின்றன.
பெங்களூருவின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக மேகேதாட்டுவில் ரூ. 9 ஆயிரம் கோடி செலவில் மிக பெரிய அணை கட்ட வேண்டிய அவசியம் இல்லை. சில நூறு கோடி ரூபாய் செலவில் ஏரி குளங்களை தூர்வாரி நீரை சேமித்தாலே போதுமானது. பெங்களூருவின் நலனில் அக்கறைப்படுவது போல் வேடமிட்டு, ஒப்பந்ததாரர்களின் நலனுக்காக அரசியல் கட்சிகள் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளன.
நாட்டிலுள்ள பெரும்பாலான பெரிய அணை திட்டங்கள் மக்களுக்கு உதவுவதை விட ஒப்பந்ததாரர்களுக்கே உதவி யுள்ளன. இதுபோன்ற பெரிய அணைகளை கட்டுவதால் அரசியல் வாதிகள், முதலீட்டாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களே முழுமையான பயனை அடைகின்றனர். இயற்கை வளங்களை அபகரிக்கும் நோக்கத்தில் செயல்படும் சில சர்வதேச நிறுவனங்கள் இத்தகைய மெகா திட்டங்களுக்கு நிதியுதவி அளிக்க ஆர்வம் காட்டுகின்றன.
மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்காக கர்நாடக அரசு 5 ஆயிரம் ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதில் 4,716 ஹெக்டேர் நிலம் வனத்துறைக்கு சொந்தமானது. மீதமுள்ள நிலம் வருவாய்த் துறைக்கு சொந்தமானது. இந்த இடத்தில் அணை கட்டுவதால் வனம் முற்றிலுமாக அழிக்கப்படுவதுடன், அங்குள்ள உயிரினங்களும் அழிக்கப்படும்.
மேகேதாட்டுவை சுற்றி உள்ள கிராமங்களில் வாழும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பழங்குடிகளும், பட்டியலினத்தவர்களும், ஏழை விவசாயிகளும் தங்களின் வசிப்பிடத்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த திட்டம் உயிரி சங்கிலியை அழிப்பதுடன், காவிரி ஆற்றையும் கடுமையான பாதிக்கும்.
மேகேதாட்டுவை சுற்றியுள்ள கிராமங்களில் வாழும் மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் நலனுக்காக கர்நாடக அரசு இந்த திட்டத்தை கைவிட வேண்டும். இந்த விவகாரத்தை தமிழகத்துடன் இருக்கும் நீர் பங்கீட்டு பிரச்சினையோடு இணைத்து பார்க்க கூடாது. அரசியல் கட்சிகள் இந்த விவகாரத்தை வேறு வேறு சாயங்களைப் பூசி சுற்றுச்சூழலை கெடுக்க கூடாது. இவ்வாறு மேதா பட்கர் தெரிவித்தார்.