ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் நகரில் நூற்றாண்டு பழமை வாய்ந்த செகந்திராபாத் மெயின் கிளப் ஹவுஸ் என்ற பெயரில் கிளப் இயங்கி வருகிறது. இந்த கிளப்புக்கு கடந்த 2017-ம் ஆண்டு பாரம்பரிய அந்தஸ்தை ஹைதராபாத் பெருநகர வளர்ச்சி ஆணையம் வழங்கியது.
144 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கிளப் கட்டிடத்தில் நேற்று அதிகாலை 3 மணிக்கு திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதையறிந்ததும் தீயணைப்புப் படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் கட்டிடம் எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து தீயணைப்புப் படை அதிகாரி ஒருவர் கூறும்போது, “சுமார் 10 தீயணைப்பு வண்டிகளில் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தோம். ஆனால் கட்டிடம் முழுவதும் எரிந்து சாம்பலாகிவிட்டது. மகர சங்கராந்தி பண்டிகையையொட்டி நேற்று முன்தினம் கிளப்புக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. மின் கசிவு காரணமாக தீ விபத்து நடந்திருக்கலாம் எனத் தெரிகிறது. கட்டிடத்தின் உள்ளே பல கேஸ் சிலிண்டர்கள் இருந்துள்ளன. இதனாலும் தீ வேகமாக பரவியது” என்றார். இந்த கிளப் 1878-ம் ஆண்டு பிரிட்டிஷாரால் கட்டப்பட்டதாகும்.