புதுடெல்லி: கடந்த 1983-ம் ஆண்டு முதல் இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து பிரம்மோஸ் ரக ஏவுகணைகளை தயாரித்து வருகின்றன. இந்த ஏவுகணைகளை நீர்மூழ்கிகள், போர்க் கப்பல்கள், போர் விமானங்கள் மற்றும் நிலத்தில் இருந்து ஏவ முடியும். இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படையில் பிரம்மோஸ் ஏவுகணைகள் தற்போது செயல்பாட்டில் உள்ளன.
உலகின் அதிவேக சூப்பர்சானிக் ஏவுகணையாக பிரம்மோஸ் உள்ளது. இது ஒலியைவிட 3 மடங்கு வேகத்தில் சீறிப் பாய்ந்து சென்று இலக்கை துல்லியமாகத் தாக்கக்கூடியது. இந்நிலையில் தென் சீனக் கடலில் சீனாவின் ஆதிக்கத்தை சமாளிக்கும் வகையில், பிலிப்பைன்ஸ் அரசு இந்தியாவிடம் இருந்து பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே பாதுகாப்பு தளவாடங்களை பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு ஏற்றுமதி செய்வது தொடர்பான இருதரப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்நிலையில் பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க `நோட்டீஸ் ஆஃப் அவார்ட்` ஒப்பந்தத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் டெல்பின் லோரன்சனா விரைவில் கையெழுத்திடவுள்ளார்.
இந்த ஒப்பந்தத்தின்படி சுமார் ரூ.,2770 கோடி மதிப்பிலான பிரம்மோஸ் ஏவுகணைகளை இந்தியா தயாரித்து பிலிப்பைன்ஸிடம் வழங்கும். இது தவிர இந்தோனேசியா உள்ளிட்ட கிழக்காசிய நாடுகளும், இந்தியாவிடம் இருந்து பிரம்மோஸ் ஏவுகணையை வாங்க ஆர்வம் காட்டுகின்றன.
பிலிப்பைன்ஸ் மேற்கொள்ளும் இந்த ஒப்பந்தம் கடலோர பாதுகாப்புக்கு ஆனதாகும் என்று அமைச்சர் லோரன்சனா தெரிவித்துள்ளார்.
- பிடிஐ