அசாம் மாநிலத்தில் 61 தொகுதிகளுக்கு இன்று இரண்டாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு காலை முதல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மதியம் 1 மணி நிலவரப்படி 55.28% வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பாஜக, அசாம் கணபரிஷத், போடோலாந்து மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் அடங்கிய கூட்டணி, காங்கிரஸ் மற்றும் அனைத்திந்திய ஜன நாயக முன்னணி ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.
மொத்தம் 525 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தம் 12 ஆயிரத்து 699 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு கோடியே 4 லட்சத்து 35 ஆயிரத்து 271 பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர். 50 ஆயிரம் பேர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
காம்ரூப் மாவட்டத்தில் துப்பாக்கிச் சூடு
காம்ரூப் மாவட்டத்தில் ஒரு வாக்குச்சாவடியில் சிஆர்பிஎஃப் வீரருக்கும் வாக்காளர்கள் சிலருக்கு ஏற்பட்ட மோதலை அடுத்து கூட்டத்தை கலைக்க வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இது குறித்து போலீஸ் எஸ்.பி பிரசாந்தா சாய்கியா கூறும்போது, "காம்ரூப் மாவட்டத்தின் நித்யாசர் குலா பஜார் பகுதியில் உள்ள எல்.பி. பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் வாக்களித்த பெண் ஒருவர் அவரது குழந்தையை வாக்குச்சாவடியிலேயே விட்டுவிட்டு வந்துள்ளார். திரும்பவும் தனது குழந்தையை எடுக்க உள்ளே செல்ல வேண்டும் என அவர் தெரிவித்திருக்கிறார். அப்போது அந்த வீரர் அப்பெண்ணிடம் தரக்குறைவாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து வாக்குச்சாவடியில் இருந்த வாக்காளர்களுக்கும் சிஆர்பிஎப் வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது" என்றார்.