இந்தியா

ஐபிஎஸ் அதிகாரியாக நடித்து ரூ.125 கோடி மோசடி செய்த பிஎஸ்எப் அதிகாரி கைது

செய்திப்பிரிவு

குர்ஹான்: ஐபிஎஸ் அதிகாரியாக நடித்து பலரிடம் ரூ.125 கோடி அளவுக்கு பண மோசடி செய்த எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்) அதிகாரியை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

ஹரியாணாவின் குர்ஹான் மாவட்டத்தில் உள்ள தேசிய பாதுகாப்புப் படை (என்எஸ்ஜி) தலைமையகத்தில் கண்காணிப்பு அதிகாரியாக பொறுப்பு வகித்து வந்தவர் பிரவீன் யாதவ். இவர் கடந்த பல ஆண்டுகளாக ஹரியாணாவில் தன்னை ஒரு ஐபிஎஸ் அதிகாரி எனக் கூறி ஏமாற்றி வந்துள்ளார். மேலும், என்எஸ்ஜி தலைமையகத்தில் கட்டிட ஒப்பந்தம் வாங்கி தருவதாக கூறி பலரிடம் கோடிக்கணக்கில் பணம் பெற்றுள்ளார்.

இந்நிலையில், இவ்வாறு பணம் கொடுத்தவர்களில் ஒருவர், பிரவீன் யாதவ் மீது போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து, போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், பிரவீன் யாதவ் நூற்றுக்கணக்கானோரிடம் இருந்து ரூ.125 கோடி அளவுக்கு பணம் பெற்று ஏமாற்றியது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, போலீஸார் நேற்று அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.14 கோடி ரொக்கம், ஒரு கோடி மதிப்பிலான நகைகள், 7 ஆடம்பரக் கார்கள் உள்ளிட்டவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT