புதுடெல்லி : இந்தியாவில் கரோனா தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட்டு இன்றுடன் ஓர் ஆண்டு நிறைவடைகிறது, இதுவரை 156.76 கோடி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அறிக்கையின்படி, “ நாட்டில் வயதுவந்தோர் பிரிவில் 92 சதவீதம் பேர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்திவிட்டனர் 68 சதவீதம் பேர் இரு டோஸ்களையும் செலுத்திவிட்டனர்” எனத் தெரிவித்துள்ளனர்.
தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட்டு ஓர் ஆண்டு நிறைவடைந்துள்ளதையடுத்து, இன்று பிற்பகலில் நடக்கும் நிகழ்ச்சியில் தபால்தலையை மத்திய அரசு வெளியிட்டு சிறப்பிக்கிறது.
கடந்த ஆண்டு ஜனவரி 16ம் தேதி நாட்டில் முதன்முதலாக கரோனா தடுப்பூசி 60வயதுக்கு மேற்பட்டவர்கள், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டது. கோவாக்சின் , கோவிஷீல்ட் ஆகிய இரு தடுப்பூசிகள் மட்டும் புழக்கத்தில் கொண்டு வரப்பட்டன. பிப்ரவரி 2-ம் தேதி முன்களப்பணியாளர்களுக்கும், 2021, மார்ச் 1ம் தேதி 60வயதுக்கு மேற்பட்ட பிரிவினருக்ுகம், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய்கள் இருப்போருக்கும் தடுப்பூசி கொண்டுவரப்பட்டது.
அதன்பின் ஏப்ரல் 1-ம் தேதி முதல் 45 மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பின் 2021,மே 1ம் தேதி முதல் 18வயது நிறைவடைந்த அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு முடிவு எடுத்தது. அடுத்ததாக 15வயது முதல் 18வயதுள்ள பிரிவினருக்கு 2022, ஜனவரி 3ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டது.
இது தவிர 60வயதுக்கு மேற்பட்டவர்கள், மருத்துவ, சுகாதாரப் பணியாளர்களுக்கு முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசியும் ஜனவரி 10ம் தேதி முதல் மத்திய அரசு செலுத்தி வருகிறது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறுகையில் “ உலகில் உள்ள வளர்ந்த நாடுகள், மேற்கத்திய நாடுகளோடு ஒப்பிடுகையில் இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் திட்டம் வெற்றிகரமாக, பரந்த அளவில், சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. தடுப்பூசி திட்டத்தில் இந்தியா, 9 மாதங்களில் 100 கோடி டோஸ்களை செலுத்தி சாதனை படைத்துள்ளது, 2.51 கோடி டோஸ் ஒரே நாளில் செலுத்தப்பட்டுள்ளது, பலமுறை ஒரு கோடிக்கும் அதிகமான டோஸ் ஒரேநாளில் செலுத்தப்பட்டுள்ளன.
2021, அக்டோபர் 21்ம் தேதி 100 கோடி டோஸ் தடுப்பூசி சாதனைஎட்டப்பட்டது, 2022, ஜனவரி 7ம் தேதி 150 கோடி டோஸ் செலுத்தி மைக்கல்லை அடைந்தோம். இதுவரை 43.19 லட்சம் முன்னெச்சரிக்கை டோஸ்தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. 15 முதல் 18வயதுள்ளவர்கள் பிரிவில் இதுவரை 3.38கோடி பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளது