புதுடெல்லி: தேர்தலுக்காக பாஜகவில் ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் ஐக்கியமாகும் நிலை சட்டப்பேரவைக்கும் தொடர்கிறது. ஆட்சியாளர்களால் தவறாகப் பயன்படுத்தப்படும் செயலை முறைப்படுத்தும் சட்ட கிடப்பில் போடப்பட்டிருப்பது தெரிகிறது.
தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வரும் அரசியல்வாதிகள், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் போன்ற குடிமைப்பணி அதிகாரிகள் மூலமாகவே மக்களுக்கு சேவை செய்கிறார்கள். இதனால், தாமே தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால், அதிக சேவையை மக்களுக்கு செய்ய முடியும் என்ற சிந்தனை இந்த அதிகாரிகள் இடையே உருவாகி விடுகிறது.
இதன் காரணமாக, சமீப காலமாக குடிமைப்பணி அதிகாரிகள் பதவிகளை ராஜினாமா செய்தும், ஓய்வு பெற்றவர்களும் அரசியலில் நுழைவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். காங்கிரஸால் துவக்கி வைக்கப்பட்ட இவ்வழக்கம், பாஜகவில் அதிகரித்து வருகிறது.
இந்தநிலை, தற்போது நடைபெறவிருக்கும் உ.பி. சட்டப்பேரவை தேர்தலிலும் துவங்கி விட்டது. இம்மாநிலத்தின் கான்பூர் காவல்துறை ஆணையரான அசீம் அருண்.ஐபிஎஸ், கடந்த மாதம் கட்டாய ஓய்வு பெற்றார்.
இவர் இன்று அதிகாரபூர்வமாக பாஜகவில் இணைந்துள்ளார். கான்பூரின் அருகிலுள்ள கன்னோஜ் நகர தொகுதியில் அசீம் அருண் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மக்களவை தொகுதியில் உ.பி.யின் முன்னாள் முதல்வர் அகிலேஷ்சிங் எம்.பி.யாக இருந்தவர். யாதவர்கள் அதிகமுள்ள கன்னோஜ், சமாஜ்வாதி ஆதரவு தொகுதியாகக் கருதப்படுகிறது.
இங்கு அசீமிற்கு கடும் போட்டி இருக்கும் சூழலும் நிலவுகிறது.ஐபிஎஸ் அசீம், தான் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் பணியால் கவர்ந்து இந்த முடிவை எடுத்ததாகத் தெரிவித்திருந்தார்.
இது குறித்து மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் முன்னிலையில் நடந்த லக்னோவில் தனது இணைப்பு விழாவில் அசீம் அருண் கூறும்போது, ‘பாஜகவில் இணைந்து எனது பணியை தொடரக் கிடைத்த வாய்ப்பிற்கு பெருமிதம் அடைகிறேன்.
எனது பணிக்காலத்தில் தொடர்ந்து அரசியல்வாதிகளால் இருந்த வந்த வலியுறுத்தல், கடந்த ஐந்து ஆண்டுகளில் எனக்கு ஒருமுறை கூட இருந்ததில்லை. இதற்காக உ.பி. யில் சட்டம் ஒழுங்கை கட்டுப்பாட்டில் வைத்து நல்ல சூழலை ஏற்படுத்திய முதல் யோகி ஆதித்யநாத்திற்கு நன்றி.’ எனத் தெரிவித்தார்.
அசீமின் தந்தையான ஸ்ரீராம் அருணும் ஒரு ஐபிஎஸ் அதிகாரி. ஓய்வு பெறுவதற்கு முன் இவர் இரண்டு முறை உ.பி. யின் டிஜிபியாக இருந்தவர். அசீம் அருணை போல் மற்றொரு உ.பி. அதிகாரியான ராஜேஷ்வர்சிங்கும் தம் பணியை ராஜினாமா செய்து தேர்தலில் போட்டியிட உள்ளார்.
உ.பி.யின் முதல்நிலை அதிகாரியான ராஜேஷ்வர்சிங், அமலாக்கத்துறையின் ஏஎஸ்பியாக உள்ளார். ராஜேஷ்வர்சிங்கின் மனைவியான லஷ்மிசிங் ஒரு ஐபிஎஸ் அதிகாரி ஆவார்.
இதனிடையே, ஓய்விற்கு பின் அரசியலில் நுழைந்த ஒரு ஐஏஸ் அதிகாரி ராம் பஹதூர், பாஜகவில் சேர உள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த இவர், 2017 சட்டப்பேரவை தேர்தலில் மோஹன்லால்கன்ச் தொகுதியில் போட்டியிட்டிருந்தார்.
வெறும் 530 வாக்குகளை தோல்வியுற்ற ராம் பஹதூர், தம் கட்சி தலைவர் மாயாவதி முதல்வராக இருந்த போது அவருக்கு மிகவும் நெருக்கமானவராகக் கருதப்பட்டார். இதன் பலனாக உ.பி.யில் முதல்வர் மாயாவதியின் ஆட்சிக் காலத்தில் பல முக்கியப் பதவிகளை அனுபவத்திருந்தார்.
எனினும், தேர்தல் தோல்விக்கு பின் இணைந்த மாயாவதி கட்சியிலிருந்து வெளியேறியவர், நாகரீக ஒற்றுமை கட்சி எனப் புதிதாகத் துவங்கினார்.
இத்துடன், உ.பி.வாசிகளுக்கு பல சமூகசேவைகளும் செய்து வந்தார். இதனால், அவர் மீண்டும் இந்தமுறை தேர்தலில் அதே மோஹன்லால்கன்ச் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இதற்காக, அவரும் ஒரிரு தினங்களில் பாஜகவில் சேர இருப்பதாகத் தெரிகிறது. பாஜகவில் பல அதிகாரிகள் இணைந்து தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டுகின்றனர்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணியின் மத்திய ஆட்சியில் அக்கட்சியின் பலரும் தன் குடிமைப்பணியிலிருந்து ராஜினாமா செய்து மத்திய அமைச்சர்களாகவும், எம்.பி.க்களாகவும் உள்ளனர்.
இதுபோல், அரசு அதிகாரிகள் கட்டாய ஓய்வு பெற்று குறிப்பிட்ட மாதங்களுக்கு தேர்தலில் போட்டியிடக் கூடாது என்பது உள்ளிட்ட பல நிபந்தனைகள் சட்டமாக்க முயற்சிக்கப்பட்டது.
எனினும், இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆளும் கட்சிகளின் வேட்பாளர்களாக போட்டியிடுவதால், இந்த சட்டம் எந்த கட்சியின் ஆட்சியிலும் அமலாக்கப்படாத நிலை தொடர்வது குறிப்பிடத்தக்கது.