ராணுவ தினத்தை ஒட்டி டெல்லியில் உள்ள கே.எம். கரியப்பா மைதானத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சாகசத்தில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள். படம்: பிடிஐ 
இந்தியா

எல்லையை மாற்றியமைக்க அனுமதிக்க மாட்டோம்: தேசிய ராணுவ தினத்தில் ராணுவ தளபதி எம்.எம். நரவானே உறுதி

செய்திப்பிரிவு

இந்திய எல்லையின் தற்போதைய நிலையை மாற்றியமைக்க யாரையும் அனுமதிக்க மாட்டோம் என்று ராணுவத் தலைமை தளபதி எம்.எம். நரவானே தெரிவித்தார்.

சுதந்திர இந்தியாவின் முதல்ராணுவத் தளபதியாக ஜெனரல் கே.எம்.கரியப்பா 1949-ம் ஆண்டுஜனவரி 15-ம் தேதி பொறுப்பேற்றார். இதை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15-ம் தேதி இந்திய ராணுவ தினமாக கொண்டாடப்படுகிறது.

குடியரசு தலைவர், பிரதமர் வாழ்த்து

இதையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், “ராணுவ தினத்தில் ராணுவ வீரர்கள் மற்றும் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கு வாழ்த்துகள். நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்திய ராணுவம் முக்கியப் பங்கு வகிக்கிறது. எல்லைகளை காப்பதிலும் அமைதியை பாரமரிப்பதிலும் நமது வீரர்கள் பணித்திறமை, தியாகம் மற்றும் வீரத்தை வெளிப்படுத்தியுள்ளனர். உங்கள் சேவைக்கு தேசம் நன்றி கூறுகிறது” என்று கூறியுள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “இந்தியராணுவ வீரர்கள் கடுமையான நிலப்பரப்புகளில் பணியாற்றுகின்றனர். இயற்கைப் பேரிடர் காலங்களில் குடிமக்களுக்கு உதவுவதில் முன்னணியில் உள்ளனர். வெளிநாடுகளில் அமைதி காக்கும் பணியிலும் ராணுவம் தனது பங்களிப்பை வழங்குகிறது. இதற்காக இந்தியா பெருமிதம் கொள்கிறது. ராணுவ தினத்தில் நமது துணிச்சலான வீரர்கள், மரியாதைக்குரிய ஓய்வுபெற்ற வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.

இந்திய ராணுவ தினம் நேற்றுநாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, டெல்லியில் சிறப்பு அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவுக்கு தலைமை வகித்த ராணுவ தளபதி எம்.எம். நரவானே பேசியதாவது:

கடந்த ஆண்டு இந்திய ராணுவத்துக்கு சவால் நிறைந்த வருடமாக இருந்தது. வடக்கு எல்லையில் சீனாவின் அத்துமீறலையும், மேற்குஎல்லையில் பாகிஸ்தானின் தீவிரவாத ஊடுருவலையும் ஒருசேர சமாளிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. எனினும், தங்களின் தன்னிகரற்ற தீரத்தாலும், துணிச்சலாலும் எதிரிகளின் அத்துமீறலைநமது வீரர்கள் முறியடித்தனர். இந்த ஆண்டு எல்லைகளில் அச்சுறுத்தல் சற்று குறைந்திருக்கிறது. ஆனாலும், நிலைமை கைமீறிச் செல் லாமல் இருப்பதற்காக சீனாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

எந்தவொரு விவகாரத்திலும் இந்தியா பொறுமையுடனும், பொறுப்புணர்வுடனும் நடந்து கொள்ளும். அவ்வாறு பொறுமையாக இருப்பதை தவறாக நினைத்து யாரும் சீண்டிப் பார்க்க வேண்டாம். அது அவர்களுக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

எல்லை விவகாரங்களை பொறுத்தவரை, இந்தியா தனது நிலைப்பாட்டை தெளிவாக தெரிவித்துவிட்டது. நமது எல்லைப் பகுதிகளின் தற்போதைய நிலையை மாற்றிஅமைக்க யாரையும் இந்தியா அனுமதிக்காது. இவ்வாறு அவர் பேசினார். - பிடிஐ

SCROLL FOR NEXT