இந்தியா

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 86 காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் வெளியீடு: சம்கார் சாகிப் தொகுதியில் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி மீண்டும் போட்டி

செய்திப்பிரிவு

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 86 வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 117 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 14-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆளும் காங்கிரஸ், சிரோமணி அகாலி தளம்-பகுஜன் சமாஜ் கூட்டணி, முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்கின் லோக் காங்கிரஸ் - பாஜக கூட்டணி, ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது.

இந்த சூழலில் ஆளும் காங்கிரஸ் முதல் வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டது. இதன்படி முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, சம்கார் சாகிப் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து, அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் மீண்டும் களமிறங்குகிறார்.

பஞ்சாப் துணை முதல்வர் சுக்விந்தர் சிங் ரந்தோவா, தேரா பாபா நானக் தொகுதி, மற்றொரு துணை முதல்வர் ஓம் பிரகாஷ் சோனி அமிர்தசரஸ் மத்திய தொகுதி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். 4 எம்எல்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. மாநில அமைச்சர்கள் அவரவர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகின்றனர். காங்கிரஸில் புதிதாக இணைந்த பாலிவுட் நடிகர் சோனு சூட்டின் சகோதரி மாளவிகா, மோகா தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இதற்கு கட்சியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

உ.பி. தேர்தலில் காங்கிரஸ் சார்பில் 40 சதவீத இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் 10.4 சதவீத பெண்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.

வேட்பாளர் தேர்வின் போது எழுந்த நெருக்கடி காரணமாக ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே வாய்ப்பு என்ற அடிப்படையில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளனர். இதனால் முதல்வர் சன்னியின் சகோதரர் மனோகர் சிங் மற்றும் நெருங்கிய உறவினர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது.

வேட்பாளர்கள் தேர்வில் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவின் கை ஓங்கியிருப்பதாகவும் முதல்வர் சன்னியின் ஆதரவாளர்கள் ஓரம் கட்டப்பட்டிருப்பதாகவும் அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

பஞ்சாபில் மீதமுள்ள தொகுதி வேட்பாளர்கள் விஷயத்தில் சன்னி - சித்து இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் மக்கான் இருவருக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.-பிடிஐ

பாஜகவில் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ

பஞ்சாபின் மோகா தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஹர்ஜோத் கமலுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதன்காரணமாக அவர் நேற்று பாஜகவில் இணைந்தார். சண்டிகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் ஹர்ஜோத் கமலை வரவேற்றனர்.

இதுகுறித்து அவர் கூறும்போது, "கடந்த 21 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸுக்காக பாடுபட்டேன். ஆனால் என்னை புறக்கணித்துவிட்டு நடிகர் சோனு சூட்டின் சகோதரி மாளவிகாவுக்கு மோகா தொகுதியை ஒதுக்கியுள்ளனர். கடந்த 10-ம் தேதிதான் அவர் கட்சியில் இணைந்தார். அவருக்கு வாய்ப்பு வழங்கியதை ஏற்க முடியவில்லை. எனவே பாஜகவில் இணைந்துள்ளேன்" என்றார்.

SCROLL FOR NEXT