"நான் தமிழில் கற்ற முதல் வார்த்தை... போடா டேய்" என்று குறிப்பிட்டுள்ள மகேந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மகேந்திரா, உணர்வுகளை உள்ளபடி வெளிப்படுத்துவதில் தமிழ் மொழியின் வல்லமையை எளிதாக விவரித்துள்ளார்.
நாட்டின் முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று மகேந்திரா அண்ட் மகேந்திரா. டிராக்டர் தயாரிப்பில் கோலோச்சி வரும் இந்த நிறுவனம் கார், சரக்கு வாகனங்கள் தயாரிப்பிலும் குறிப்பிடத்தக்க பங்கு வகித்து வருகிறது. இந்த நிறுவனத்தின் நிர்வாகத் தலைவராக ஆனந்த் மகேந்திரா பதவி வகித்து வருகிறார். இவர் அடிக்கடி தனது சமூக வலைதள பக்கத்தில் சுவாரசியமான தகவல்களை பதிவிடுவார். அந்த பதிவுகள் பலமுறை வைரலாகும். அந்த வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது தமிழ் மொழி அனுபவம் பற்றி பகிர்ந்துள்ளார்.
அதில், "’நீங்கள் கூறும் கருத்தை கேட்பதற்கும், உங்களது விளக்கத்தை புரிந்து கொள்ளவும் எனக்கு நேரம் இல்லை. எனக்கு தனிமை தேவைப்படுகிறது. என்னை தொந்தரவு செய்யாமல் விட்டால், உங்களை நிச்சயம் பாரட்டுவேன்’ என்ற வாக்கியங்களை ஆங்கிலத்தில் கூறுவதற்கு இணையான தமிழ் வாக்கியம்: "போடா டேய்" என்று பகிர்ந்துள்ளார்.
அத்துடன், “நான் தமிழகத்தில் பள்ளிப் படிப்பை படித்தேன். அவ்வாறு படிக்கையில் நான் கற்ற முதல் வார்த்தை 'போடா டேய்' என்பதுதான். இந்த வார்த்தையை எனது வாழ்க்கையில் பலமுறை பயன்படுத்தியிருக்கிறேன். சில முறை சத்தமாகவும், பலமுறை மெதுவாக” என்று குறிப்பிட்டிருந்தார்.
தமிழைப் பற்றிய ஆனந்த் மகேந்திராவின் இப்பதிவு, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.