புதுடெல்லி: நாட்டில் கரோனா வைரஸ், ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களிலும் நேரடியாகத் தேர்தல் பிரச்சாரங்கள், கூட்டங்கள் நடத்த தேர்தல் ஆணையம் தடை விதித்த நிலையில் அந்தத் தடையை நீட்டிப்பது குறித்து தேர்தல் ஆணையம் இன்று ஆலோசிக்கிறது.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களிலும் சட்டப்பேரவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கும் தேர்தல் மார்ச் 7-ம் தேதி வரை நடக்கிறது. 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.
இதில் ஜனவரி 15-ம் தேதி வரை 5 மாநிலங்களிலும் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரம் செய்யவும், பொதுக்கூட்டங்கள், பேரணி நடத்தவும் தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
நாட்டில் கரோனா வைரஸ் பரவல், ஒமைக்ரான் பரவல் ஆகியவற்றை மருத்துவ வல்லுநர்கள், சுகாதாரத்துறை அமைச்சகத்துடன் கலந்து ஆலோசித்து பின் 15-ம் தேதி மீண்டும் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தது.
அதுவரை அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பிரச்சாரங்கள், கூட்டங்களில் பங்கேற்காமல் காணொலி மூலம் கூட்டங்களை நடத்தலாம், பிரச்சாரம் செய்யவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் 5 மாநிலங்களிலும் பொதுக்கூட்டங்கள், பேரணிகள், பிரச்சாரங்கள் நடத்த அனுமதிப்பதா அல்லது தடையை நீட்டிப்பதா என்பது குறித்து தேர்தல் ஆணையம் இன்று ஆலோசிக்கிறது.
ஏற்கெனவே அரசியல் கட்சிகளுக்கு 16 அம்சங்கள் கொண்ட வழிகாட்டி நெறிமுறைகளைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில், பொதுக்கூட்டங்கள், பேரணிகள், சிறிய கூட்டங்கள் நடத்தக்கூடாது, வீட்டுக்கு வீடு பிரச்சாரம் செய்ய சிலர் மட்டுமே வேட்பாளருடன் 5 பேர் மட்டுமே வேண்டும், வெற்றிக் கொண்டாட்டம் கூடாது எனத் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தேர்தல் நடக்கும் இந்த மாநிலங்களில் வானொலி ஒலிபரப்பு மற்றும் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்வதற்காக ஒளி, ஒலிபரப்பு நேரத்தை அதிகரிப்பது குறித்து பிரச்சார் பாரதியுடன் தேர்தல் ஆணையம் நேற்று ஆலோசனை நடத்தியுள்ளது.
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 2.68 லட்சம் பேர் புதிதாக கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் கரோனா பரவல் அதிகரித்து வருகிறதே தவிர குறையவில்லை. ஆதலால், ஏற்கெனவே தேர்தல் ஆணையம் விதித்திருந்த தடையை நீட்டிக்கவே வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.