புதுடெல்லி: பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாக திடீரென மாறிய மோசமான வானிலையே காரணம். அதனால் பைலட் மேக மூட்டங்களுக்குள் செல்ல நேர்ந்தது. ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது என்று முப்படை விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.
இந்திய முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்அவருடைய மனைவி மற்றும் ராணுவ அதிகாரிகள் சென்ற ஹெலிகாப்டர் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கடந்த டிச. 8-ஆம் தேதியன்று விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் பிபின் ராவத் அவருடைய மனைவி உள்ளிட்ட 14 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து விசாரிக்க ஏர்மார்ஷல் மன்வேந்திர சிங் தலைமையில் முப்படை விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இக்குழு சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தியது. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டி மற்றும் களத்தில் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் விசாரணை அறிக்கை தயாரிக்கப்பட்டது.
குழுவின் விசாரணை அறிக்கைபாதுகாப்புத் துறை அமைச்சர்ராஜ்நாத் சிங்கிடம் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டது.
விபத்துக்கான காரணம், இனிஎதிர்காலத்தில் இதுபோன்று நடக்காமல் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், அதற்கான பரிந்துரைகள் ஆகியவை விசாரணைக் குழு அறிக்கையில் இடம்பெற்றிருப்பதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், விசாரணை அறிக்கையின் விவரம் வெளியாகியுள்ளது. அதில், "விசாரணையின் படி இயந்திரக் கோளாறோ அல்லது சதி வேலையோ, விமானியின் கவனக்குறைவோ விபத்திற்குக் காரணம் இல்லை. திடீரென வானிலை மோசமடைந்தபோது ஹெலிகாப்டர் அந்த மேகமூட்டத்துக்குள் சிக்கியது. இதனால் விமான திசைமாறி Controlled Flight into Terrain (CFIT), என்ற ரீதியில் எதிர்பாராமல் தரையில் விழுந்து நொறுங்கியது" என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
எம்ஐ-17வி-5 ஹெலிகாப்டர்: விபத்துக்குள்ளாகிய எம்ஐ சீரிஸ் வகை ஹெலிகாப்டர் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ரஷ்யாவிடம் இருந்து எம்ஐ-17வி5 ரக 12 ஹெலிகாப்டர்களை கடந்த 2013ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆர்டர் செய்து வாங்கியது. பொருட்களை ஏற்றிச் செல்லும் வகையிலும் வீரர்களை ஏற்றிச்செல்லும்வகையிலும் எம்ஐ-17வி5 ஹெலிகாப்டர் வடிவமைக்கப்பட்டது. உலகிலேயே அதிநவீன ஹெலிகாப்டர்களில் இதுவும் ஒன்று. படைவீரர்களைக் கொண்டு செல்லுதல், ஆயுதங்களைக் கொண்டு செல்லுதல், தீயணைப்புப்பணி, பாதுகாப்புப் பணி, கண்காணிப்பு, மீட்புப்பணி ஆகியவற்றுக்கும் இதை பயன்படுத்த முடியும். இந்த ரக ஹெலிகாப்டர் மணிக்கு அதிகபட்சமாக 250 கி.மீ வேகத்திலும், சராசரியாக 580 கி.மீ தொலைவும், அதிகபட்சமாக 1,065 கி.மீ தொலைவையும் எரிபொருள் மூலம் கடக்க முடியும்.அதிகபட்சமாக 6 ஆயிரம் மீட்டர் உயரம்வரை பறக்க முடியும்.
இந்த ஹெலிகாப்டரில் ஃபோம் பாலியுரேதேன் எனும் வேதிப்பொருள் எரிபொருள் டேங்கில் நிரப்பப்பட்டிருக்கும். ஆதலால், ஹெலிகாப்டர் வெடித்துச் சிதறும்போது, பெரிய விபத்து ஏற்படாமல் தடுத்துவிடும். மேலும் ஜாமர் வசதிகள், இன்ப்றா ரெட் வசதிகள் உள்ளன. இத்தகைய அதி நவீன ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதால் தான் முப்படை விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.