இந்தியா

மேலும் 300 நாடாளுமன்ற ஊழியர்கள்; கார்கே, வீரப்ப மொய்லிக்கு கரோனா தொற்று உறுதி

செய்திப்பிரிவு

மேலும் 300 நாடாளுமன்ற ஊழிர்கள், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மல்லிகார்ஜுன கார்கேவின் உதவியாளர் ரவீந்திர கரிமெல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், "மல்லிகார்ஜுன கார்கேவின் டெல்லி அலுவலகத்தில் சில ஊழியர்களுக்கு அண்மையில் கரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து, கார்கேவுக்கு நேற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவருக்குகரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது. மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் வீட்டுத்தனிமையில் அவர் சிகிச்சை எடுத்துவருகிறார். அவருடன் சமீபகாலமாக தொடர்பில் இருந்தவர்கள், கரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்" என கூறப்பட்டுள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவரும் கர்நாடக முன்னாள் முதல்வருமான வீரப்ப மொய்லிக்கு (82) கரோனாவைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் கூறுகையில், "கடந்த புதன்கிழமை லேசான காய்ச்சலும் இருமலும் ஏற்பட்டதால் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொண்டேன். அதில் எனக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. எனது உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள், வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தினர்'' என்றார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31-ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த சூழலில், கடந்த வாரம் 400-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற ஊழியர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், கடந்த 9 முதல் 12-ம் தேதி வரை நடத்தப்பட்ட பரிசோதனையில் 300-க்கும்மேற்பட்ட நாடாளுமன்ற ஊழியர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.- பிடிஐ

SCROLL FOR NEXT