திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திரு மலையே விழாக்கோலம் பூண் டிருந்தது. அதிகாலை மூலவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதன்பின்னர் பிரமுகர்கள் சுவாமி தரிசனத்திற்கு அதிகாலை 2 மணி முதல் அனுமதிக்கப்பட்டனர்.
இதில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா, உச்ச நீதிமன்ற நீதிபதி உதய் உமேஷ் லலித், ஆந்திர மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ரா, கர்நாடக மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரித்து ராஜ் அவஸ்தி, தெலங்கானா மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர்மா, ஆந்திர மாநில துணை முதல்வர் நாராயணசாமி உட்பட பலர் ஏழுமலையானை தரிசித்து அதன் பின்னர் சொர்க்க வாசல் வழியாக பிரதட்சணம் செய்தனர்.
காலை 9 மணி முதல் சாமானிய பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய அனுமதி கிடைத்தது. இதில் வழக்கத்தை விட அதிகமாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். வரும் 22-ம் தேதி வரை 10 நாட்களுக்கு சொர்க்க வாசல் தரிசனம் உள்ளது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று காலை ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் மலையப்பர் தங்க ரதத்தில் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.