இந்தியா

போலி என்கவுன்ட்டர் மாணவர் கொலையில் 18 போலீஸார் குற்றவாளிகள் என நிரூபணம்: டெல்லி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

செய்திப்பிரிவு

உத்தரகண்ட் மாநிலத்தில் 2009ம் ஆண்டில் எம்பிஏ மாணவர் ஒருவர் கொல்லப்பட்டது போலி என்கவுன்ட்டரில் எனவும் இதில் 18 போலீஸாருக்கு தொடர்பு இருப்பதாகவும் டெல்லி நீதிமன்றம் ஒன்று வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கியது.

இவர்களுக்கான தண்டனையை முடிவு செய்ய சனிக்கிழமை விசாரணை நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த என்கவுன்ட்டரில் ரணவீர் சிங் (22) கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் 6 சப்-இன்ஸ்பெக்டர்கள், ஒரு கான்ஸ்டபிள், உள்ளிட்ட 18 போலீஸாருக்கு தொடர்பு இருப்பதாக சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜே.பி.எஸ். மாலிக் கூறினார்.

என்கவுன்ட்டரில் தொடர்பு உள்ளவர்கள் என அறிவிக்கப் பட்ட18 போலீஸாரில் 7 பேர் கொலைக்காகவும் மற்றவர்கள் மாணவரை கடத்தி, இதர சதி வேலைகளில் ஈடுபட்டதற்காகவும் தண்டிக்கப்படுவார்கள் என நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

கொலைக் குற்றம் செய்தவர்களாக சந்தோஷ் குமார் ஜெய்ஸ்வால், கோபால் தத் பட் (போலீஸ் நிலைய அலுவலர்), ராஜேஷ் பிஷ்ட், நீரஜ் குமார், நிதின் சௌகான், சந்தர் மோகன் சிங் ராவத் ஆகிய சப் இன்ஸ்பெக்டர்களும் கான்ஸ்டபிள் அஜித் சிங்கும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

உத்தரகண்ட்டுக்கு 2009 ஜூலை மாதம் அப்போதைய குடியரசுத் தலைவர் பிரதிபா சிங் பாட்டீல் சென்றபோது ரணவீர் சிங் என்கவுன்ட்டர் சம்பவம் நடந்தது. இது தொடர்பாக போலீஸார் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்த வழக்கில் நீதிபதி தீர்ப்பை வாசித்தபோது என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட மாணவரின் பெற்றோரும் உறவினர்களும் இருந்தனர்.

நீதிபதி தீர்ப்பை வெளியிட்டு முடித்தபிறகு வெளியே வந்த ரணவீரின் தந்தை, மகனை நினைத்து தேம்பி தேம்பி அழுதார். குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கவேண்டும் என கோரினார்.

ரணவீரின் தந்தை ரவீந்திர சிங் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த வழக்கை 2011ல் டெல்லி நீதிமன்றத்துக்கு மாற்ற உத்தரவிட்டது.

SCROLL FOR NEXT