புதுடெல்லி: நாடு முழுவதும் அன்றாடம் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் இது தொடர்பாக மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
கரோனா அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களிலும் இரவு ஊரடங்கு, ஞாயிறு ஊரடங்கு, அலுவலகங்களில் 50% பணியாளர்களுடன் வேலை எனப் பல்வேறு கெடுபிடிகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஏற்கெனவே நாடு முழுவதும் 15 முதல் 18 வயதில் உள்ள சிறாருக்கு தடுப்பூசி செலுத்துவதிலும், 60 வயதுக்கு மேற்பட்ட முன்களப் பணியாளர்கள், இணை நோய் கொண்டோர், முதியோர் ஆகியோருக்கு முன்னெச்சரிக்கை டோஸ் போடப்பட்டு வருகிறது. ம
காராஷ்டிரா, மேற்குவங்கம், டெல்லி, தமிழகம், கர்நாடகா, உத்தரப் பிரதேசம், கேரளா, குஜராத் ஆகிய மாநிலங்கள் கரோனா பரவல் மிகவும் அதிகமாக இருப்பதால் இந்த மாநிலங்கள் கூடுதல் கண்காணிப்பு வளையத்துக்குள் வருகின்றன.
இந்நிலையில் மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனையின் போது கரோனா தடுப்பு நடவடிக்கைகள் அவர் கேட்டறிந்தார்.
கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
‘‘கரோனா வைரஸை எதிர்த்துப் போராட தடுப்பூசிகள் சிறந்த தீர்வு. நம் நாடு உட்பட பல நாடுகளில் ஒமைக்ரான் பரவி வருகிறது. இந்த மாறுபாட்டை எதிர்த்துப் போராடும் வேளையில், அடுத்த நெருக்கடிக்கு நாம் தயாராக இருக்க வேண்டும். கோவிட்க்கு எதிரான மிகப்பெரிய ஆயுதம் தடுப்பூசி. நாட்டில் தொண்ணூற்று இரண்டு சதவீத வயது வந்தோருக்கு தடுப்பூசியின் முதல் டோஸ் கொடுக்கப்பட்டுள்ளது. தடுப்பூசிகள் பற்றிய வதந்திகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.