லக்னோ: உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் அரசில் இருந்து இன்று மூன்றாவது அமைச்சர் தரம் சிங் சைனி தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் பாஜகவில் இருந்து விலகுவதாக முன்பு தகவல் வெளியான நிலையில் அதனை மறுத்து வந்தநிலையில் இன்று பதவி விலகியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் 7 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கும் தேர்தல் மார்ச் 7ம்தேதி வரை நடக்கிறது.
இந்த நிலையில், மாநிலத்தின் இதர பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தின் மிக முக்கிய தலைவரான சுவாமி பிரசாத் மவுரியா பாஜகவில் இருந்து விலகினார். தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ஆனந்திபென் படேலுக்கு அனுப்பி வைத்தார். பின்னர் மவுரியா சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவை சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து பாஜக எம்எல்ஏக்கள் 4 பேரும் அகிலேஷ் யாதவை சந்தித்தினர்.
அடுத்த பரபரப்பாக முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அமைச்சரவையில் இருந்து இரண்டாவது அமைச்சரான தாரா சிங் சவுகான் நேற்று பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
பாஜவில் இருந்து 7-வது எம்எல்ஏவும், பிற்படுத்தப்பட்ட சாதித் தலைவருமான முகேஷ் வர்மா இன்று அக்கட்சியில் இருந்து வெளியேறினார்.
இந்தநிலையில் பாஜகவில் இருந்து தலைவர்கள் வெளியேறுவது இன்றும் தொடர்கிறது.
உத்தரப் பிரதேசத்தில் முதல்வர் யோகி அமைச்சரவையில் இருந்து ஆயுஷ் அமைச்சர் தரம் சிங் சைனி இன்று ராஜினாமா செய்தார்.
தலித் தலைவரும், நகுட் சட்டப்பேரவையில் இருந்து நான்கு முறை எம்எல்ஏவாக இருந்தவர். தனது ராஜினாமா கடிதத்தை உ.பி. ஆளுநருக்கு அனுப்பினார். பின்னர், முன்பு கடந்த 3 நாட்களாக பாஜகவில் இருந்து வெளியேறியவர்கள் செய்ததை போலவே சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், மௌரியா மற்றும் தாராவுடன் சைனியுடன் புகைப்படம் எடுத்தது போல் இவரும் புகைப்படம் எடுத்து ட்வீட் செய்தார்.
தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத கால அவகாசம் உள்ள நிலையில், மூன்று நாட்களில் பாஜகவில் இருந்து எட்டாவதாக ஒரு தலைவர் வெளியேறுவது குறிப்பிடத்தக்கது. இவர்கள் அனைவரும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியில் சேரவுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்திற்கு முன்பு தரம் சிங் சைனி, பாஜகவில் இருந்து விலகுவதாக வெளியான செய்திகளை மறுத்தார். அவர் சுவாமி பிரசாத் மௌரியாவைக் கடுமையாகச் சாடினார். ஆனால் தற்போது அவர் வெளியேறியுள்ளார்.