லக்னோ: உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஒருமாதமே இருக்கும் நிலையில் தேர்தல் தேதி அறிவித்தபின் நாள்தோறும் பாஜகவிலிருந்து எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் விலகியவாறு இருக்கிறார்கள். இதனால் கட்சித் தலைமை கலக்கமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன
உத்தரப் பிரதேசத்தில் உள்ள 403 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கி மார்ச் 7-ம் தேதிவரை 7 கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. மார்ச் 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.
உ.பி. தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து நாளொருமேனி பொழுதொரு வண்ணமாய் தினந்தோறும் எல்எல்ஏக்கள் கடந்த 3 நாட்களாக பாஜகவிலிருந்து வெளியேறி வருகிறார்கள்.
இதர பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தின் மிக முக்கியத் தலைவரான சுவாமி பிரசாத் மவுரியா பாஜகவில் இருந்து விலகினார். இதைத் தொடர்ந்து பாஜக எம்எல்ஏக்கள் 4 பேரும் அகிலேஷ் யாதவைச் சந்தித்தனர். அடுத்ததாக அமைச்சர் தாரா சிங் சவுகான் நேற்று பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். பாஜகவில் இருந்து 7-வது எம்எல்ஏவும், பிற்படுத்தப்பட்ட சாதித் தலைவரும், சிகாஹோபாத் தொகுதி எம்எல்ஏ முகேஷ் வர்மா இன்று அக்கட்சியில் இருந்து விலகினார்.
இந்நிலையில் 8-வதாக பிதுனா தொகுதி பாஜக எம்எல்ஏ வினய் சாக்யாவும் அந்தக் கட்சியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்து ராஜினாமா கடிதத்தை கட்சித் தலைமைக்கு அனுப்பியுள்ளார். அந்த ராஜினாமா கடிதத்தையும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். சாக்யாவின் சகோதரர் தேவேஷ் சாக்யா, தாய் த்ரவ்பதி சாக்யா ஆகியோர் இன்று காலை மவுரியாவின் இல்லத்துக்கு வந்தனர்.
பாஜக எம்எல்ஏ வினய் சாக்யா கூறுகையில், “பிற்படுத்தப்பட்டோரின் குரலாக இருப்பவர் மவுரியாதான். அவர் பாஜகவிலிருந்து விலகியபின் அவருக்கு ஆதரவாக நானும் ராஜினாமா செய்துவிட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே சுவாமி பிரசாத் மவுரியா கூறுகையில், “நான் 14-ம்தேதி சமாஜ்வாதி கட்சியில் சேரப்போகிறேன். இதுவரை எந்த சிறிய பெரிய அரசியல்வாதியிடம் இருந்தும் அழைப்பு இல்லை” எனத் தெரிவித்தார்.
வினய் சாக்யா எழுதிய ராஜினாமா கடிதத்தில், “பாஜக ஆட்சியின் கடந்த 5 ஆண்டுகளில், தலித் தலைவர்கள், ஏழைகள், சிறுபான்மை சமூகத்தினர் ஆகியோருக்கு போதிய முக்கியத்துவம் அளிக்கவில்லை, மதிக்கவும் இல்லை. இதைத் தவிர்த்து ஏழைகளைப் பற்றியும், விவசாயிகள், வேலையில்லாத இளைஞர்கள் பற்றியும் சிறிதுகூட அரசு கவலைப்படவில்லை. இதன் காரணமாகவே நான் கட்சியிலிருந்து விலகுகிறேன். மவுரியாதான் பிற்படுத்தப்பட்ட மக்களின் குரலாக இருக்கிறார்” எனத் தெரிவித்தார்.