இந்தியா

சுவாமி பிரசாத் மவுரியாவுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிப்பு: அகிலேஷை சந்தித்த நிலையில் நடவடிக்கை

செய்திப்பிரிவு

லக்னோ: உத்தர பிரதேச முன்னாள் அமைச்சர் சுவாமி பிரசாத் மவுரியாவுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் பாஜகவின் முக்கிய தலைவராக கருதப்பட்ட சுவாமி பிரசாத் மவுரியா அகிலேஷ் சிங் யாதவை சந்தித்தார். அவர் சமாஜ்வாதி கட்சியில் இணைந்துவிட்டார் என்று கூறப்பட்டது.

இந்நிலையில், கடந்த 2014 ஆம் ஆண்டு மத ரீதியாக வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசியதாக அவருக்கு எதிராகப் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2014 ல் மவுரியா, பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்தார். அப்போது அவர், "திருமண நிகழ்ச்சிகளில் விநாயகரையும், கவுரியையும் வணங்கக் கூடாது. இது ஆதிக்க சாதியினர் தலித்துகளை அடிமைப்படுத்த ஏற்படுத்தி வைத்த நடவடிக்கை" என்று பேசியிருந்தார்.
இதற்கு முன்னதாகவும் இந்த வழக்கில் இவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. ஆனால், 2016ல் அலகாபாத் உயர் நீதிமன்றம் பிடிவாரண்ட் மீது இடைக்காலத் தடை பிறப்பித்தது.

இந்நிலையில் சுல்தான்பூர் நீதிமன்றம் அவரை ஜனவரி 12 ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பியது. அவர் ஆஜராகாததால் அவர் மீது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாஜகவில் பூகம்பம் ஏற்பட்டுள்ளது.. தனது விலகலால் பாஜகவில் பூகம்பம் ஏற்பட்டுள்ளது என மவுரியா கூறியுள்ளார். அமைச்சர் பதவியைத் தான் ராஜினா செய்துள்ளேன். விரைவில் பாஜகவிலிருந்தும் விலகுவேன். நான் சமாஜ்வாதி கட்சியில் சேரவில்லை. வெள்ளிக்கிழமை வரை காத்திருங்கள். மிகப்பெரிய அறிவிப்பு வரும் என்று கூறியுள்ளார்.

பாஜகவிலிருந்து மேலும் பலரும் வெளியே வருவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT