திருமலை: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டுஇன்று அதிகாலை 2 மணிக்கு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.
வரும் 22-ம் தேதி வரை தொடர்ந்து 10 நாட்கள் வரை சொர்க்க வாசல் தரிசனத்தில் பக்தர்கள் பங்கேற்கும் வகையில் திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடுகளை செய்துள்ளது. இதற்கு முன்வைகுண்ட ஏகாதசி மற்றும் மறுநாள் துவாதசிக்கு மட்டுமே சொர்க்கவாசல் தரிசனம் பக்தர்களுக்கு கிடைத்து வந்தது.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று காலை 2 மணிக்குசொர்க்க வாசல் திறக்கப்பட்ட பின்னர், முதலில் விஐபி பக்தர்களும், அவர்களை தொடர்ந்து, காலை 9 மணி முதல் சாமானிய பக்தர்களும் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிப்பட உள்ளனர்.
திருப்பதியிலும் உள்ளூர் பக்தர்களுக்கென 10 நாட் களுக்கு 50 ஆயிரம் டிக்கெட்டுகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோயில் முழுவதும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. தேவி, பூதேவி சமேதமாய் உற்சவரான மலையப்பர் தங்க தேரில் 4 மாட வீதிகளில் பவனிவந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நாளை துவாதசியையொட்டி, காலை கோயில் குளத்தில் சக்கர ஸ்நானம் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.