இந்தியா

பாஜக தலைமை அலுவலக ஊழியர்கள் 42 பேருக்கு கரோனா பாதிப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: பாஜக தலைமை அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் 42 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

சுமார் பத்து வருடங்களுக்கும் மேலாக பாஜகவின் தலைமை அலுவலகம் டெல்லியின் இருதயப் பகுதியான, எண் 11, அசோகா சாலையில் இயங்கி வந்த நிலையில், கடந்த 2018-ல் புதிய தலைமை அலுவலகம் திறக்கப்பட்டது. அதன்படி, எண் 6, பண்டிட் தீன்தயாள் உபாத்யா மார்க் என்ற இடத்தில் பாஜகவின் தலைமை அலுவலகம் செயல்படுகிறது. இந்த அலுவலகத்தில் பணிபுரிந்துவந்த சுமார் 42 ஊழியர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

பாஜகவின் முக்கிய கூட்டம் ஒன்று இன்னும் சில தினங்கள் முன்பாக இந்த அலுவலகத்தில் நடக்கவிருக்கிறது. கடந்த சில மாதங்களாக, பாஜக அலுவலகத்தில் நடக்கும் கூட்டத்துக்கு முன்பாக கரோனா பரிசோதனை செய்யப்படுவது வழக்கமாக்கப்பட்டு வந்தது. அதன்படி, இந்தக் கூட்டத்துக்கு முன்பாக அலுவலகத்தில் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் தான் 42 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. மேலும் கரோனா பாதிப்படைந்தவர்கள் பலர் தூய்மைப் பணியாளர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கரோனா பாதிப்புக்குள்ளான அனைவரும் தங்களை தனிமைப்படுத்தி கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். ஊழியர்கள் வெளியேற்றப்பட்டதும், பாஜக அலுவலகம் முழுவதுமாக தூய்மைப்படுத்தபட்டுள்ளது. ஊழியர்கள் அனைவரும் வீட்டுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அலுவலகம் தொடர்பான முக்கிய நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மட்டுமே தற்போது பணிக்கு வருகிறார்கள் என்றும் பெயர் குறிப்பிட விரும்பாத பாஜக நிர்வாகி ANI செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதம் நடைபெறவுள்ள உத்தரப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் கோவா முதலான ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பல கூட்டங்கள் பாஜக நடத்தி வருகிறது. நேற்று கட்சியின் தலைமையகத்தில் ஒரு விவாத கூட்டம் நடந்த நிலையில், இன்று இரண்டாம் கட்ட கூட்டம் நடைபெறுகிற நிலையில்தான் ஊழியர்களுக்கு கரோனா என்ற செய்தி வெளியாகியுள்ளது. ஏற்கெனவே பாஜக தலைவர் ஜேபி நட்டா மற்றும் பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி போன்ற பல தலைவர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதியானது.

இதேபோல், கர்நாடக முதல்வர் பசவராஜ் எஸ் பொம்மை, பீகார் முதல்வர் நிதிஷ் குமார், பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் அஜய் பட், பாஜகவின் தேசிய துணைத் தலைவரான ராதா மோகன் சிங் போன்ற இன்னும் சிலரும் கரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT