இந்தியா

பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடிக்கு பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசுதான் காரணம்: முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் பேட்டி

செய்திப்பிரிவு

பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடிக்கு பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசுதான் காரணம் என்று முன்னாள் முதல்வரும், கேப்டனுமான அமரீந்தர் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் சார்பில் முதல்வராக இருந்தவர் கேப்டன் அமரீந்தர் சிங். காங்கிரஸ் மூத்த தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனது பதவியை அமரீந்தர்சிங் ராஜினாமா செய்தார். இந்நிலையில், பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கினார். மேலும், பஞ்சாப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளார்.

அமரீந்தர் சிங் ‘தி இந்து' நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: கடந்த வாரம் பிரதமர் இங்குவருகை தந்தபோது அவரது பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடிக்கு காங்கிரஸ் அரசுதான் காரணம். பிரதமர் வரும் வழியில் போராட்டம் நடத்தவும், சாலை மறியல் செய்யவும் காங்கிரஸ் அரசுதான் பணம் கொடுத்து ஏற்பாடுகளைச் செய்துள்ளது. அது நிச்சயம் விவசாயிகள் நடத்திய சாலை மறியல் போராட்டமோ அல்லது தர்ணாவோ கிடையாது. மாநில அரசு ஸ்பான்சர் செய்த திட்டமிட்ட போராட்டம்.

பிரதமர் இங்கு வருகை தந்துபிரச்சாரம் செய்வதால் பாஜகவுக்கும் அவர்களுடன் கூட்டணி வைக்கப் போகும் எங்களுக்கும் பலன்கள் அதிகமாக ஏற்பட இருந்தது. இது தெரிந்துதான் காங்கிரஸ் அத்தகைய மோசமான செயலில் ஈடுபட்டது. மாநில காங்கிரஸுக்கு மக்கள் மீது அக்கறையில்லை. உள்கட்சிப் பூசலிலேயே அவர்கள் காலம் தள்ளிக் கொண்டு இருக்கின்றனர். பஞ்சாப் மாநில அரசுக்கு ரூ.5 லட்சம் கோடி கடன் உள்ளது. அதை நீங்கள் எப்படி திருப்பிச் செலுத்தப் போகிறீர்கள்? இதுதொடர்பாக கேள்வி கேட்டால் அவர்களிடம் விடை இல்லை.

பஞ்சாபில் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்காலம் இல்லை. உட்கட்சிப் பூசல்தான் அவர்களது பிரதான தொழிலாக உள்ளது. மாநில காங்கிரஸ் தலைவராக இருக்கும் சித்துவுக்கும், முதல்வராக இருக்கும் சரண்ஜித் சிங் சன்னிக்கும் இடையே பிரச்சினை உள்ளது.

சிறு குழந்தை போல செயல்பட்டு வருகிறார் சித்து. கோரிக்கை மேல் கோரிக்கையாக வைத்துக் கொண்டு இருக்கிறார். அவர் எதிலும் திருப்தி அடையப் போவதில்லை. தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று சித்து விரும்புகிறார். அப்படி அவரை முதல்வர் வேட்பாளராக காங்கிரஸ் தலைமை அறிவித்தால், மாநிலத்தில் உள்ள தலித் ஓட்டுகள் காங்கிரஸுக்கு கிடைக்காது. சித்து காணாமல் போய்விடுவார்.

அதேபோல் சிரோமணி அகாலி தளம் கட்சியின் நிலைமையும் மோசமாக உள்ளது. இதற்கு முன்பு அவர்கள் ஆட்சியில் இருந்தபோது அவர்கள் செய்த குளறுபடிகளை மக்கள் அறிந்துள்ளனர்.

புதிதாக தற்போது ஆம் ஆத்மி கட்சியும் பஞ்சாபில் கால் பதிக்க முயன்று வருகிறது. 2017 பேரவைத் தேர்தலில் 25% வாக்குகளை வாங்கிய ஆம் ஆத்மி கட்சியினர் 2019 மக்களவைத் தேர்தலில் 7% வாக்குகளை மட்டுமே பெற்றனர். இந்த முறை இரட்டை இலக்க சதவீதத்தை எட்டுவார்களா என்பது தெரியவில்லை.

அதேபோல் விவசாய சங்கங்களும் இம்முறை தேர்தலில் போட்டியிட முயன்று வருகின்றன. ஆனால்அவர்கள் தேர்தலில் போட்டியிட்டால் நம்பகத்தன்மையை இழந்துவிடுவார்கள். விவசாய சங்கங்களின் தலைவர்கள் பெரும்பாலும், தேர்தலில் போட்டியிட விரும்புவதில்லை. எனவே இம்முறை பாஜகவுக்கும், அவர்களுடன் கூட்டணி வைத்துள்ள எங்களுக்கும் மக்கள் ஆதரவு அளிப்பார்கள் என்று நம்புகிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT