புதுடெல்லி: 25-வது தேசிய இளைஞர் விழாவை பிரதமர் நரேந்திர மோடி நாளை காணொலி வாயிலாக தொடங்கி வைக்கிறார்.
தமிழகத்தில் மருத்துவக்கல்லூரிகளை தொடங்கி வைக்க வரும் போது புதுச்சேரியில் தேசிய இளைஞர் விழாவை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க திட்டமிடப்பட்டது. ஆனால் கரோனா பரவல் காரணமாக நேரடி நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
இந்தநிலையில் புதுச்சேரியில் நாளை காலை 11 மணி அளவில், நடைபெறவுள்ள 25-வது தேசிய இளைஞர் விழாவை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைக்கவுள்ளதாக மத்திய இளைஞர் நலத்துறை செயலாளர் உஷா சர்மா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘தேசிய இளைஞர் விழா, தேசிய ஒருமைப்பாட்டை வலுப்படுத்துவதோடு மட்டுமின்றி, இளைஞர்களிடையே மதநல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவ உணர்வை பரப்புகிறது.
ஜனவரி 12-ம் தேதி தலைசிறந்த தத்துவஞானியும், சிந்தனையாளருமான சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள் ஆண்டுதோறும் தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி புதுச்சேரியில் இந்த ஆண்டு கோவிட் தொற்றுச் சூழல் காரணமாக இந்த விழா 12–13 ஜனவரி 2022 காணொலி வாயிலாக நடைபெறவிருக்கிறது. பிரதமர் மோடி இதனை காணொலி வாயிலாக நாளை தொடங்கி வைக்கிறார்.
சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளை நாம் கொண்டாடும் வேளையில், அவரது போதனைகள் மற்றும் இளைஞர் சக்தியைப் பற்றிய அவரது அசையா நம்பிக்கைகள், இந்தியாவில் மாறி வரும் காலச்சூழலைப் பிரதிபலிப்பதாக உள்ளது.
இந்த விழா இந்திய இளைஞர்களின் மனதை வடிவமைப்பதோடு அவர்களை தேச நிர்மாணத்திற்கான ஒருங்கிணைந்த சக்தியாக மாற்றியமைக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.