இந்தூர்: மத்தியப் பிரதேச அரசு ரூ.2.56 லட்சம் கோடி கடனில் சிக்கித் தவிக்கிறது. மக்கள் ஒவ்வொருவர் தலை மீதும் ரூ.34,000 கடன் சுமை இருக்கிறது. இந்தச் சூழலில் ரூ.2,000 கோடியில் ஆதி சங்கரருக்கு 108 அடி உயரத்தில் சிலை வைக்க திட்டமிட்டுள்ளது விமர்சனத்தை எழச் செய்துள்ளது.
காந்தவா மாவட்டம், ஓம்கரேஸ்வரில் 108 அடி உயரத்தில் ஆதி சங்கராச்சார்யாவுக்கு சிலை செய்ய முடிவெடுத்து கடந்த 2017-ம் ஆண்டே மக்களிடம் இருந்து உலோகங்களைப் பெறும் எகாதம் யாத்ரா என்ற பயணம் தொடங்கப்பட்டிருக்கிறது. இது குறித்து மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், ஆச்சார்யா சங்கரா சமஸ்கிருத ஏக்தா நியாஸ் அறக்கட்டளை நிர்வாகிகளுடன் கடந்த வாரம் ஆலோசனை நடத்தியுள்ளார். முக்கியமான சாதுக்கள், துறவிகள், சுவாமி ஆவேதஸ்ஸானந்த் கிரி ஜி மகராஜ் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் முதல்வர் சிவராஜ் சிங் கூறுகையில் “மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஓம்கரேஸ்வரில் ரூ.2 ஆயிரம் கோடியில் சங்கராச்சார்யா சிலை வைக்கப்படும். இந்த உலகம் ஒரு குடும்பம்தான், அதுதான் இந்த சிலையின் தத்துவம். அறக்கட்டளையின் நிர்வாகிகளிடம், உறுப்பினர்களிடம் இருந்து ஆலோசனைகள், கருத்துக்களைப் பெற்று இந்தத் திட்டத்தை அரசு செயல்படுத்தும்” எனத் தெரிவித்தார்
ஆனால், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கமல்நாத் கூறுகையில் “பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யாதபோது, இந்த திட்டம் பற்றி ஆலோசனை செய்யத்தான் முடியும். பட்ஜெட்டில் பணம் ஒதுக்கீடு செய்தபின் முறைப்படி ஆலோசிக்கலாம்” எனத் தெரிவித்தார்.
இந்தத் திட்டத்துக்காக ரூ.2 ஆயிரம் கோடியை செலவிட மத்தியப் பிரதேச அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால், பட்ஜெட்டின் தொகை ரூ.2.41 லட்சம் கோடி, ஒட்டுமொத்த அரசின் ஒட்டுமொத்தக் கடன் ரூ.2.56 லட்சம் கோடி. தனிநபர் தலையில் ரூ.34,000 கடனாக இருக்கிறது. இந்தப் புள்ளி விவரங்களின் அடிப்படையில் மத்தியப் பிரதேச அரசு மீது விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.