புதுடெல்லி: பஞ்சாபில் நடந்த அரசியல் பொதுக்கூட்டங்களிலேயே, பெரோஸ்பூர் கூட்டம் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய கூட்டமாக நடந்திருக்கும், ஆனால் பிரதமரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்க விடாமல் தடுத்து விட்டனர் என மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் சவுகான் கூறினார்.
பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக கடந்த ஐந்தாம் தேதி பிரதமர் மோடி விமானம் மூலம் பஞ்சாப் சென்றார். மோசமான வானிலை காரணமாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு காரில் செல்ல முடிவு செய்யப்பட்டது. ஆனால், விவசாயிகள் போராட்டம் காரணமாக அவரது வாகன அணி வகுப்பு மேம்பாலத்தில் 15 நிமிடத்துக்கும் மேலாக நின்றது.
போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததால் தனது பயணத்தை பிரதமர் மோடி ரத்து செய்து பிரதமர் பாதி வழியிலேயே டெல்லி திரும்பினார். பிரதமரின் பாதுகாப்பில் மாநில அரசு அலட்சியமாக செயல்பட்டதாகவும், பிரதமர் மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் பாஜகவினர் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பஞ்சாபில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள் மத்திய அமைச்சர்கள் கஜேந்திர சிங், ஹர்தீப் சிங் புரி முன்னிலையில் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற கஜேந்திர சிங் சவுகான் பேசியதாவது:
பஞ்சாபில் நடந்த அரசியல் பொதுக்கூட்டங்களிலேயே, பெரோஸ்பூர் கூட்டம் இதுவரை இல்லாத அளவுக்கு வரலாற்றிலேயே மிகப் பெரியதாக அமைந்திருக்கும். ஆனால், அரசியல் கட்சியினர், காவல்துறையினருடன் இணைந்து கொண்டு, கூட்டத்தில் பங்கேற்க வந்த பொதுமக்களை மட்டுமல்ல, பிரதமரைக் கூட பொதுக்கூட்டத்தில் பங்கேற்க விடாமல் தடுத்துள்ளனர். இது பாஜக, தொண்டர்களை மேலும் பலப்படுத்தும்.
இவ்வாறு அவர் பேசினார்.