பெங்களூரு: கர்நாடகாவின் ஹவேரி மாவட்டத்தில் கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதால் வங்கிக்கு தீ வைத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடகாவின் ரட்டிஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் வாசிம் ஹசரத்சாப் முல்ல (வயது 33). இவர், காகினேலி காவல் எல்லைக்குள் வரும் ஹெடுகொண்டா கிராமத்தில் உள்ள, கனரா வங்கியில் கடன் பெற விண்ணப்பித்திருந்தார். ஆனால், ஆவணங்கள் சரிபார்த்த பிறகு அவரது கடன் விண்ணப்பத்தை வங்கி நிராகரித்தது.
இவரின் சிபில் ஸ்கோர் குறைவாக இருந்ததன் காரணமாக இருந்தாக கூறி கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த முல்லா, சனிக்கிழமை இரவு, அந்த வங்கிக் கிளைக்கு வந்தார்.
வங்கியின் ஜன்னலை உடைத்து உள்ளே பெட்ரோல் ஊற்றினார். பின்னர் அலுவலகத்திற்கு தீ வைத்தார். அவ்வழியாகச் சென்றவர்கள் புகை மூட்டத்தைக் கண்டு காவல் துறையினருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
மேலும் தீ வைத்த நபரை பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.