புதுடெல்லி: தமிழகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள 11 அரசு மருத்துக் கல்லூரிகளை டெல்லியில் இருந்து பிரதமர் மோடி நாளை காணொலிக் காட்சி மூலம் நாளை திறந்து வைக்கிறார்.
தமிழகத்தில் ரூ.4,000 கோடிமதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 11 அரசு மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் மோடி 12-ம் தேதி(நாளை) விருதுநகரில் நடக்கும் விழாவில் கலந்து கொண்டு திறந்துவைப்பார் என்று ஏற்கெனவே கூறப்பட்டது. ஆனால், கரோனா பரவல் காரணமாக பிரதமரின் தமிழக வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து காணொலிக் காட்சி மூலம் புதிய மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் திறந்து வைக்கிறார். பிரதமர் அலுவலகம் இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் விருதுநகர், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், திருவள்ளூர், நாகப்பட்டினம், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, அரியலூர், ராமநாதபுரம் மற்றும் கிருஷ்ணகிரி ஆகியமாவட்டங்களில் புதிய மருத்துவக்கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன. அரசு அல்லது தனியார் மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் நிறுவப்படும் முயற்சியாக இவைநடைமுறைப்படுத்தப்படவுள்ளன. புதிய 11 மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 1,450 இடங்கள் உள்ளன.
தமிழகத்தில் நிறுவப்பட்டுள்ள 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளையும், சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் புதிய வளாகத்தையும் 12-ம் தேதி (நாளை) மாலை 4 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் பிரதமர் மோடிதிறந்து வைக்க உள்ளார். சுமார் 4,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மருத்துவக் கல்லூரிகள் நிறுவப்பட்டுள்ளன. இதில் சுமார் 2,145 கோடி ரூபாய் மத்திய அரசாலும் மீதித் தொகை தமிழக அரசாலும் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் புதிய கட்டிடம்
சென்னை பெரும்பாக்கத்தில் ரூ.24.65 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் புதிய கட்டிடத்தையும் பிரதமர் மோடி காணொலிக் காட்சி மூலமாக நாளை திறக்கவுள்ளார் என நிறுவனத்தின் இயக்குநர் இரா.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். தமிழ் செவ்வியலின் சிறப்பை உலகம் முழுவதும் கொண்டும் செல்லும் நோக்கில் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்துக்குச் சொந்தமாகக் கட்டிடம் இல்லாததால் சென்னை தரமணியில் உள்ள சாலைப் போக்குவரத்து நிறுவன வளாகத்தில் கடந்த 2012 மே மாதம் முதல் செயல்பட்டு வருகிறது.
அதன்படி, செம்மொழி நிறுவனத்துக்கு நிரந்தரக் கட்டிடம் கட்டுவதற்காகத் தமிழக அரசு சார்பில் சென்னை பெரும்பாக்கத்தில் 17 ஏக்கர் பரப்பளவில் நிலம் வழங்கப்பட்டது. இதில் 3 அடுக்கு மாடிக் கட்டிடம் கட்டுவதற்காக மத்திய அரசு ரூ.24 கோடியே 65 லட்சத்து 47 ஆயிரம் நிதியை 2017-ம் ஆண்டு ஒதுக்கியது. இந்நிலையில் கட்டிடத்தின் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளது. இதில் சுமார் 50 ஆயிரம் தமிழ் நூல்களைக் கொண்ட நூலகம், மின் நூலகம், கருத்தரங்கு அரங்குகள், மல்டிமீடியா அரங்கம், பூங்கா உள்ளிட்ட ஏராளமான வசதிகள் உள்ளன.