புதுடெல்லி: கோவின் இணையதளத்தில் பதிவு செய்து தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் படத்துடன் சான்று வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு பல்வேறு எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங் களில் பிப்ரவரி 10 முதல் மார்ச் 7-ம் தேதி வரை சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாநிலங் களுக்கான தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா நேற்று முன்தினம் அறிவித்தார். அன்றைய தினம் முதல் 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
இதைத் தொடர்ந்து உத்தர பிரதேசம் உட்பட சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் கரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் நரேந்திர மோடியின் படம் நீக்கப்பட்டுள்ளது. இதற்காக கோவின் தளத்தில் சுகாதாரத் துறை மாற்றங்களை செய்துள்ளது. -பிடிஐ