பாட்னா: பிஹார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் அவர் வீட்டிலேயே தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
உலகம் முழுவதும் கரோனா அச்சுறுத்தல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் தற்போது 3-வது அலை தொடங்கிவிட்டதால், தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. கரோனா வைரஸின் உருமாற்ற டெல்டா வைரஸ் பரவுவதோடு, தற்போது ஒமைக்ரான் வைரஸ் பரவலும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், பிஹார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவர் வீட்டுத் தனிமையில் இருப்பதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக இன்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கரோனா தொற்று உறுதியானது.
ஏற்கெனவே டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு தொற்று உறுதியானது. உச்ச நீதிமன்ற ஊழியர்கள், நாடாளுமன்ற ஊழியர்கள் எனப் பலருக்கும் தொற்று உறுதியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக ஒரு லட்சத்து 759 ஆயிரத்து 723 பேர் கரோனாவில் பாதி்க்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 57 லட்சத்து 7 ஆயிரத்து 727ஆக அதிகரி்த்துள்ளது. கடந்த 227 நாட்களு்குப்பின் ஒரேநாளில் 1.79 லட்சம்பேர் கரோனாவில் பாதிக்கப்படுவது இதுதான் முதல்முறை.