இந்தியா

"Anocracy"-அனோகிரசி! பாஜக அரசை விமர்சிக்க புதிய வார்த்தையை அறிமுகப்படுத்திய காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: காங்கிரஸ் எம்.பி. சரி தரூரின் ஆங்கிலச் சொல்லாடல் புலமை உலகப் புகழ் பெற்றது. அவர் தனது ஆங்கிலப் புலமையைக் கொண்டு அண்மைக்காலமாக புதுப்புது வார்த்தைகளால் மத்திய பாஜக அரசை விமர்சித்து வருகிறார்.

அந்த வரிசையில் நேற்று அவர், தனது ட்விட்டரில் ஒரு புதிய வார்த்தையைப் பயன்படுத்தி பாஜக அரசை விமர்சித்திருந்தார்.

ANOCRACY என்பது தான் அந்த வார்த்தை. அனோகிரசி என்பதை சசி தரூர் இவ்வாறாக விளக்கியுள்ளார். "அனோகிரசி ANOCRACY என்பது ஜனநாயகக் கொள்கைகளுடன், சர்வாதிகார அம்சங்களை இணைத்து நடத்தும் ஓர் அரசாங்கம். இந்த அரசாங்கம் தேர்தலை அனுமதிக்கும். எதிர்க்கட்சிகள் போட்டியிட அனுமதிக்கும். ஆனால், குறைந்தபட்ச பொறுப்புணர்வுடன் செயல்படும்" என்று கூறியுள்ளார்.

5 மாநிலத் தேர்தலும் வார்த்தைப் போர்களும்: உத்தர பிரதேசம், கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தராகண்ட் ஆகிய 5 மாநில தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. வரும் பிப்ரவரி 10-ம் தேதி தேர்தல் தொடங்கி மார்ச் 7-ம் தேதிவரை தேர்தல் நடக்கிறது.

மணிப்பூரில் தேர்தல் இரு கட்டங்களாக நடக்கிறது. முதல் கட்டத் தேர்தல் பிப்ரவரி 27-ம் தேதியும், 2-வது கட்டம் மார்ச் 3-ம் தேதியும் நடக்கிறது.
மற்ற 3 மாநிலங்களான உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப் ஆகியவற்றுக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 14-ம் தேதி தேர்தல் நடக்கிறது. வரும் 21-ம் தேதி இந்த மாநிலங்களில் வேட்புமனுத் தாக்கல் தொடங்குகிறது, 28-ம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்யக் கடைசி நாளாகும். 29-ம் தேதி வேட்புமனு பரிசீலனையும், 31-ம் தேதி வேட்புமனுவைத் திரும்பப் பெறக் கடைசி நாளாகும்.

அனைத்து மாநிலத் தேர்தலும் முடிந்தபின் மார்ச் 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

தொடர்ச்சியாக 10 ஆண்டுகளாக தேர்தல் தோல்விகளை சந்தித்து வரும் காங்கிரஸ் கட்சிக்கு இந்தத் தேர்தல் மிகவும் முக்கியமானத் தேர்தல்.
இந்நிலையில் வார்த்தைப் போர்கள் இப்போதே இந்த ஐந்து மாநிலங்களிலும் களைக்கட்டத் தொடங்கிவிட்டன.

Allodoxaphobia: ஏற்கெனவே கடந்த மாதம் சசி தரூர் மத்திய அரசை விமர்சிக்க "Allodoxaphobia" என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். அப்படியேன்றால் கருத்துகள் மீது தர்க்க காரணமற்ற பயம் என்று பொருள். இந்த வார்த்தையை தேசவிரோத தடுப்புச் சட்டங்கள், உய்பா சட்டங்களை பாஜக அரசு பயன்படுத்தும் விதம் குறித்து விமர்சிக்க அவர் பயன்படுத்தினார். "பாஜக அரசு மக்கள் மீது தேசவிரோத தடுப்புச் சட்டம், சட்டவிரோத ஆயுத தடுப்புச் சட்டம் ஆகியனவற்றைப் பயன்படுத்துக்கிறது. இதற்குக் காரணம் அந்த அரசாங்கம் அலோடோஸாஃபோபியாவில் பாதிக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.

SCROLL FOR NEXT