இந்தியா

இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு 1.60 லட்சமாக அதிகரிப்பு; பிரதமர் மோடி அவசர ஆலோசனை: மாவட்ட அளவிலும் மருத்துவ வசதிகளை ஏற்படுத்த உத்தரவு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு 1.60 லட்சமாக உயர்ந்துள்ளநிலையில், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத் துறை உயர் அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திரமோடி நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது மாவட்ட அளவிலான மருத்துவமனைகளிலும் தேவையான படுக்கை வசதி, மருந்துகள், ஆக்ஸிஜன் படுக்கை வசதிகளை ஏற்படுத்துமாறு பிரதமர் உத்தரவிட்டார்.

நாட்டில் கரோனா 2-வது அலை வெகுவாக குறைந்து வந்தது. தினமும் 10 ஆயிரத்துக்கும் குறைவான பாதிப்பு என்ற அளவில் கரோனா 2-வது அலை இறுதிக்கட்டத்தை எட்டியது. இந்த நேரத்தில், உருமாறிய கரோனாவான ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவத்தொடங்கியது. அதைத் தொடர்ந்து கரோனா வைரஸ் பரவலும் திடீரென அதிகரித்து வருகிறது.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு வரை 7 ஆயிரத்துக்கும் குறைவான பேர் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், சில நாட்களாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது தினமும் 1 லட்சத்துக்கு அதிகமானோருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகி வருகிறது. பரவலை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களும் கட்டுப்பாடுகள், இரவு நேர ஊரடங்கை அறிவித்து வருகின்றன. டெல்லியில் வார இறுதிநாட்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும் நேற்றுமுழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில், நாட்டில் ஒருநாள்கரோனா பாதிப்பு எண்ணிக்கை நேற்று 1.60 லட்சத்தை எட்டியுள்ளது. ஒரேநாளில் 327 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். நாடுமுழுவதும் தற்போது 5,90,611 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையும் 3 ஆயிரத்தை கடந்துள்ளது. டெல்லி, மகாராஷ்டிராவில் ஒருநாள் கரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை கடந்துள்ளது.

அதேநேரத்தில் நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரமடைந்துள்ளது. கடந்த 3-ம் தேதியில் இருந்து 15 முதல்18 வயது வரையிலான சிறார்களுக்கும் கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கடந்த 5 நாட்களில் மட்டும் 2 கோடிக்கும் அதிகமான சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நாட்டில் ஒட்டுமொத்தமாக இதுவரை 151.57 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், கரோனா பாதிப்பு நிலைமை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை 4.30 மணிக்கு சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். காணொலி காட்சி வாயிலாக நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, சுகாதாரத்துறை செயலாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளின் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

கரோனா சிகிச்சைக்கு தேவையான அத்தியாவசிய மருந்துகள்,ஆக்சிஜன் இருப்பு உள்ளிட்டவை குறித்தும் எந்தெந்த பகுதிகளில் தடுப்பூசி குறைவாக போடப்பட்டுள்ளது என்பது குறித்தும் அதிகாரிகளிடம் பிரதமர் கேட்டறிந்தார். தடுப்பூசி போடும் பணியை மேலும் விரைவுபடுத்த வேண்டும் என்றுஅதிகாரிகளுக்கு பிரதமர் உத்தரவிட்டார்.

அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலும் கரோனா சிகிச்சைக்கு தேவையான படுக்கை வசதிகள், மருந்துகளை தயார் நிலையில் வைத்திருக்க அதிகாரிகளுக்கு பிரதமர் மோடிஉத்தரவு பிறப்பித்தார்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில், ‘கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,59,632 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது முந்தையநாள் பாதிப்பைவிட 11 சதவீதம் அதிகமாகும். ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,623 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிராவில் 1,009பேரும், டெல்லியில் 513 பேரும்ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 15.63 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 69 கோடி பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT