சீக்கியர்களின் 10-வது குரு கோவிந்த் சிங்கின் பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பஞ்சாபின் அமிர்தசரஸ் நகரில் உள்ள பொற்கோயில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. படம்: பிடிஐ 
இந்தியா

சீக்கிய குரு கோவிந்த் சிங் மகன்களின் நினைவாக டிச. 26-ம் தேதி வீர் பால் தினம் கொண்டாடப்படும்: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: சீக்கிய குரு கோவிந்த் சிங்கின் மகன்களின் தியாகத்தை நினைவு கூரும் வகையில் டிசம்பர் 26-ம் தேதி வீர் பால் திவஸ் தினமாக கொண்டாடப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

சீக்கியர்களின் 10-வது குரு கோவிந்த் சிங். இவரது தந்தையும் சீக்கியர்களின் 9-வது குருவுமான தேக் பகதூர் காஷ்மீர் பண்டிட்டுகளின் பாதுகாப்புக்காக போராடினார். இதன்காரணமாக அப்போதைய முகலாய மன்னர் அவுரங்கசீப்பால் கொலை செய்யப் பட்டார். இதைத் தொடர்ந்து 9-வது வயதில் 10-வது சீக்கிய குருவாக கோவிந்த் சிங் பொறுப்பேற்றார். இவருக்கு 4 மகன்கள். இதில் 5, 8 வயதான மகன்களை முகலாய ஆட்சியாளர்கள் சிறை பிடித்து உயிரோடு சுவரில் புதைத்தனர். 13, 17 வயது மகன்கள் முகலாய படையுடனான போரில் உயிரிழந்தனர். கடந்த 1708-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி மகாராஷ்டிராவில் முகாமிட்டிருந்த குரு கோவிந்த் சிங், முகலாய உளவாளிகளால் படுகொலை செய்யப்பட்டார்.

குரு கோவிந்த் சிங் மகன்களின் உயிர்த் தியாகத்தை நினைவுகூரும் வகையில் டிசம்பர் 26-ம் தேதி வீர் பால் திவஸ் தினமாக கொண்டாடப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி நேற்று அறிவித்தார். இதுதொடர்பாக ட்விட்டரில் அவர் நேற்று வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது:

சீக்கியர்களின் 10-வது குருகோவிந்த் சிங்கின் பிறந்தநாள்இன்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் குரு கோவிந்த் சிங், அவரது மகன்களின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26-ம் தேதி வீர் பால் திவஸ் தினமாக கொண்டாடப்படும் என்று அறிவிக்கிறேன். அன்றைய தினம் குரு கோவிந்த் சிங்கின் 2 மகன்கள் சாகிப்சாதா ஸோராவர் சிங், சாகிப்சாதா பத்தே சிங் ஆகியோர் உயிரோடு சுவரில் புதைக்கப்பட்டனர்.

தர்மத்தை காத்தவர்கள்

தர்மத்தை காக்க இருவரும் உயிர்த்தியாகம் செய்தனர். குரு கோவிந்த், அவரது மகன்களின் வீர, தீரம் லட்சக்கணக்கான மக்களுக்கு வலிமையை அளிக் கிறது. அவர்கள் அநீதிக்கு தலை வணங்கவில்லை. அனைவரையும் அரவணைக்கும் நல்லெண்ணம் கொண்டவர்களாக வாழ்ந்தனர். அவர்களின் தர்மம், துணிச்சல், தியாகத்துக்கு மரியாதை செலுத்து கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

- பிடிஐ

SCROLL FOR NEXT