புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 224 நாட்களில் இல்லாத அளவுக்கு கரோனா தொற்று அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 632 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், ''இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 632 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 224 நாட்களுக்குப் பின் தினசரி பாதிப்பு 1.50 லட்சத்தைக் கடந்துள்ளது.
நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 கோடியே 55 லட்சத்து 28 ஆயிரத்து 4 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் கடந்த 197 நாட்களில் இல்லாத அளவாக 5 லட்சத்து 90 ஆயிரத்து 611 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் 327 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 83 ஆயிரத்து 790 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் ஒமைக்ரான் பரவலின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 552 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 3,623 ஆக அதிகரித்துள்ளது. இதில் 1409 பேர் குணமடைந்துவிட்டனர். மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 1009 பேரும், டெல்லியில் 513 பேரும், கர்நாடகாவில் 441 பேரும், ராஜஸ்தானில் 373 பேரும், கேரளாவில் 333 பேரும், குஜராத்தில் 204 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1.66 சதவீதமாக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் சதவீதம் 96.98 ஆகக் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 442 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் தினசரி பாதிப்பு சதவீதம் 10.41 ஆக அதிகரித்துள்ளது. 24 மணி நேரத்தில் 40 ஆயிரத்து 863 பேர் கரோனாவால் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 15,63,566 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 69,00,34,525 பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதுவரை 151.57கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது'' என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.