நாடு முழுவதும் ஒரே வாரத்தில் 2 கோடிக்கும் மேற்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட் டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கரோனா 3-வது அலை தொடங்கி உள்ளது. இத்துடன் ஒமைக்ரான் என்ற புதுவகை வைரஸும் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், 15 முதல் 18 வயதுக்குட்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த 3-ம் தேதி தொடங்கியது. பள்ளிகளிலும் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று, “சிறப்பாக செல்கிறது என் இளைய நண்பர்களே. 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த 3-ம் தேதி தொடங்கியது. ஒரே வாரத்தில் 2 கோடிக்கும் மேற்பட்டோருக்கு முதல்டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட் டுள்ளது” என பதிவிட்டுள்ளார்.
நாடு முழுவதும் உள்ள 18 வயதுக்கு மேற்பட்டோரில் 91 சதவீதம் பேர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இதுபோல 66 சதவீதம் பேர் 2 டோஸ் தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனர்.
இவ்வாறு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.- பிடிஐ