இந்தியா

கரோனா கால தேர்தலில் சமூகவலைதள பிரச்சாரம்: ஐந்து மாநிலங்களில் அதிக பலன் பெறும் அரசியல் கட்சி எது?

ஆர்.ஷபிமுன்னா

கரோனா பரவல் காலத்தில் நடத்தப்படும் தேர்தலில் சமூக வலைதளங்களின் பிரச்சாரம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதில் எந்த அரசியல் கட்சிக்கு அதிக பலன் கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

உத்தர பிரதேசம், உத்தரா கண்ட், மணிப்பூர், கோவா மற்றும் பஞ்சாப் மாநிலங்களின் தேர்தல்கள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றில் நேரடியாக இல்லாமல் சமூக வலைதளங்கள், இணைய தளங்கள் வாயிலாக பிரச்சாரங்கள் முன்னிறுத்தப் பட்டுள்ளன. இந்த வகை பிரச்சாரங் களை மட்டும் நம்பி தேர்தலில் இறங்கும் சூழலும் உருவாகி விட்டது.

கரோனா பரவலால் தனது பிரச்சாரக் கூட்டங்களை ரத்து செய்த முதல் கட்சியாக காங்கிரஸ் உள்ளது. கடந்த வாரம் இதன் பொதுச் செயலாளர் பிரியங்கா வதேரா பங்கேற்ற கூட்டம் உத்தர பிரதேசத்தின் பரேலியில் நடைபெற்றது. அதில் ஆயிரக்கணக்கில் கூடிய இளம் பெண்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு கரோனா ஆபத்து அதிகரித்தது. இதனால், தனது கூட்டங்களை ரத்து செய்யும் முடிவை காங்கிரஸ் எடுத்திருந்தது.

இதற்கு முன்பாக தனது சமூக வலைதளப் பிரிவுகளை உறுதியாக்கிக் கொண்டது காங் கிரஸ். இவற்றில் துவக்கம் முதலாக காங்கிரஸ் தலைவர்களான ராகுல் காந்தியும், பிரியங்கா வதேராவும் அதிகக் கவனம் செலுத்தி வருகின்றனர். எனவே, தனது கட்சிக்கான சமூக வலைதளப் பிரச் சாரங்களை போதுமான அளவிற்கு தம்மால் செய்ய முடியும் என காங்கிரஸ் நம்புகிறது.

இந்த விவகாரத்தில் முன்னாள் முதல்வரான அகிலேஷ் சிங் யாதவின் சமாஜ்வாதி கட்சி இன்னும் தயாராகவில்லை எனத் தெரிகிறது. உத்தர பிரதேசத்தின் முக்கிய எதிர்க்கட்சியான இதன் பெரும்பாலான வாக்காளர்கள் கிராமவாசிகள் என்பதால் புதிய வகை பிரச்சாரம் அக்கட்சிக்கு சிக்கலாகி விட்டது. எனினும், தனது சமூக வலைதளப் பிரிவை புதிய பொலிவுடன் அவசரமாக மாற்றி பிரச்சாரத்திற்கும் தயாராகி வருகிறது சமாஜ்வாதி.

உத்தர பிரதேசத்தின் மற் றொரு முன்னாள் முதல்வரான மாயாவதியின் பகுஜன் சமாஜுக்கும் அகிலேஷின் கட்சியை போல் பிரச்சினை உள்ளது. இக்கட்சியின் வாக்காளர்களிலும் பலர் கிராமவாசிகள் எனக் கருதப்படுகிறது. இதன் காரணமாக அக்கட்சி பத்திரிகைகள் வாயி லாகப் பிரச்சாரம் செய்யலாம் என திட்டமிட்டுள்ளது. தனது சமூக வலைதளப் பிரிவையும் உறுதிப்படுத்தி வரும் மாயாவதி, அதன் நடவடிக்கைகளையும் முடுக்கி விட்டிருக்கிறார்.

சமூக வலைதளங்களை பயன்படுத்தி பிரச்சாரங்களை துவங்கிய முதல் கட்சியாக ஆம் ஆத்மி உள்ளது. டெல்லியில் புதிதாகத் துவங்கிய இக்கட்சி தனது இணையவழிப் பிரச்சாரத்தால் ஆட்சியை பிடித்தது. எனினும், இந்தவகைப் பிரச்சாரத்தை கடைப்பிடிக்கத் துவங்கிய பாஜக, ஆம் ஆத்மி கட்சியை மிஞ்சி நிற்கிறது. இக்கட்சி 2014 மக்களவை தேர்தலில் வென்று மத்தியில் ஆட்சி அமைத்திருந்தது.

அப்போது முதல் அதன் அரசு நிர்வாகத்திலும் இணையவழிகளை பிரதமர் நரேந்திர மோடிஅதிகமாக அமலாக்கி வருகிறார். இதனால், சமூக வலைதளப் பிரச்சாரங்களின் பலன் பாஜகவிற்கே அதிகம் சேரும் வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும், இதற்கு உத்தர பிரதேச வாசிகள் இடையே அப்பிரச்சாரங்களை சந்திக்கும் வகையில் இணையதள வசதி கள் அதிகம் இல்லை எனக் கருதப்படுகிறது.

ஐந்து மாநிலங்களில் பெரியதான உத்தர பிரதேசத்தில் 15.02 கோடி வாக் காளர்கள் இந்த முறை உள்ள னர். இதில் புதிதாக 18 முதல் 19 வயதிற்குள்ளான 3.89 கோடி வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். இச்சூழலில், உத்தர பிரதேசத்தில் நிலவும் சமூகப் பொருளாதார அடிப்படையில் பெரும்பாலான வாக்காளர்களிடம் இணையதள வசதிகள் கிடையாது. எனவே, நேரடியாக சிறிய அளவில் கூட்டம் சேர்த்து பிரச்சாரம் செய்வதும் அவசியமாகிறது. இதை செய்யாத வேட்பாளர்களின் வெற்றி உறுதியல்ல என்ற நம்பிக்கையும் உத்தர பிரதேசத்தில் மேலோங்கி நிற்கிறது.

SCROLL FOR NEXT