இந்தியா

மோசமான சென்னை - திருப்பதி சாலை: சுங்க கட்டணம் வசூலிக்க ரோஜா எதிர்ப்பு

செய்திப்பிரிவு

திருப்பதி: சென்னை - திருப்பதி இடையேயுள்ள தேசிய நெடுஞ்சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோசமான உள்ள நிலையில் மக்களிடம் சுங்க கட்டணம் வசூலிக்க கூடாது என நகரி தொகுதி எம்.எல்.ஏ.வும்,நடிகையுமான ரோஜா புகார் அளித்துள்ளார்.

சென்னை - திருப்பதி இடையே உள்ள தேசிய நெடுஞ்சாலை கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த கன மழையின் காரணமாக குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த தடத்தில் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

சில சமயங்களில் வாகனங்களும் பழுதாகி நின்று விடுகின்றன. இதில் குறிப்பாக திருப்பதியிலிருந்து ரேணிகுண்டா, புத்தூர், நகரி வரை சாலை மிக மோசமாக உள்ளது. இதனால், நேற்று விஜயவாடாவில் உள்ள போக்குவரத்துத்துறை செயலாளர் கிருஷ்ண பாபுவிடம் நகரி எம்எல்ஏ ரோஜா புகார் மனு அளித்தார்.

அதில் கூறப்பட்டிருப்பதாவது: சென்னை - திருப்பதி இடையே தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இயங்குகின்றன. தற்போது சாலை மிகவும் மோசமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆனால், சாலையை புதுப்பிக்காமலேயே புத்தூர் அருகே வடமலைப்பேட்டை சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது எந்த வகையில் நியாயம் ? இந்த சாலையை புதுப்பித்த பின்னரே அவ்வழியே வரும் வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலிக்க வேண்டும் என புகாரில் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னையில் உள்ள தேசிய நெடுஞ்சாலை துறையினரிடமும் கலந்தாலோசிக்கப்பட்டது. விரைவில் திருப்பதி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறும் என ஆந்திர போக்குவரத்து செயலாளர் கிருஷ்ணபாபு உறுதி அளித்துள்ளார்.

SCROLL FOR NEXT