திருவனந்தபுரம்: ஆசிரியர்களை இனி 'சார்' அல்லது 'மேடம்' என்று அழைக்காமல் 'டீச்சர்' என்று மட்டும் அழைக்க வேண்டும் என்று தங்களது மாணவர்களுக்கு கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளி அறிவுறுத்தியுள்ளது.
பாலக்காடு மாவட்டம் ஒளச்சேரி என்ற கிராமத்தில் உள்ள அரசு உதவி பெறும் உயர்நிலை பள்ளிதான் இந்த அறிவுரையை தங்கள் மாணவர்களுக்கு வழங்கியுள்ளது. சமீபத்தில் கேரளத்தில் பாலின பாகுபாட்டை மாணவர்கள் மத்தியில் களையும் பொருட்டு அனைவருக்கும் பொதுவான உடைகள் (யூனிஃபார்ம்) அறிவிக்கப்பட்டன. ஒளச்சேரி பள்ளியும் மாணவ - மாணவிகளுக்கு பொதுவான உடைகளை ஏற்றுக்கொண்டுள்ளது.
உடையை அடுத்து தற்போது ஆசிரியர்களை அழைப்பதிலும் பாலின சமன்பாட்டை கடைபிடிக்கும் வகையில் மாணவர்கள் இனி 'சார்' அல்லது 'மேடம்' என்று அழைக்காமல் பொதுவாக ''டீச்சர்'' என்றே அழைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதன்மூலம் ஆசிரியர்களிடம் பேசுவதில் பாலின சமன்பாட்டை கொண்டுவரும் மாநிலத்தின் முதல் பள்ளி என்ற பெருமையை ஒளச்சேரி பள்ளி பெற்றுள்ளது.
இந்தப் பள்ளியில் மொத்தம் 300 மாணவர்கள் பயின்று வரும் நிலையில், ஒன்பது பெண் ஆசிரியர்களும், எட்டு ஆண் ஆசிரியர்களும் உள்ளனர். என்றாலும் இந்த யோசனையை ஓர் ஆண் ஆசிரியர்தான் தெரிவித்துள்ளார். பள்ளியின் தலைமை ஆசிரியர் வேணுகோபாலன் இதுதொடர்பாக பேசுகையில் "எங்கள் ஆசிரியர்களில் ஒருவரான சஜீவ் குமார்தான் ஆசிரியர்களை சார், மேடம் என பிரித்து அழைக்க வேண்டாம் என்ற யோசனையை தெரிவித்தார். இந்த மாற்றத்தை ஏன் கொண்டு வரக்கூடாது என்று நாங்கள் நினைத்தோம்.
அதை மாணவர்களிடமும் கொண்டுச் சென்றோம். எங்களின் யோசனையை மாணவர்களின் பெற்றோர்களும் வரவேற்றுள்ளனர். இறுதியாக டிசம்பர் 1 முதல் அனைத்து ஆசிரியர்களையும் பொதுவான வார்த்தையில் அழைக்குமாறு மாணவர்களிடம் கூறினோம். ஆரம்பத்தில் இதில் மாணவர்கள் தயக்கம் காட்டினாலும், இப்போது அனைவரும் கூப்பிடும் விதத்தை மாற்றியுள்ளனர்.
மாணவர்கள் யாரும் தற்போது சார், மேடம் என அழைப்பதில்லை. சார், மேடம் என்ற வார்த்தைகள் பாலின நீதிக்கு எதிரானது. ஆசிரியர்கள் அவர்களின் பாலினத்தால் அல்ல, அவர்களின் பதவி மூலம் அறியப்பட வேண்டும். ஆசிரியர்களிடம் உரையாடும் இந்த புதிய வழி காரணமாக, மாணவர்கள் பாலின நீதி பற்றிய விழிப்புணர்வை பெற முடியும்" என்று தெரிவித்துள்ளார்.