புதுடெல்லி: பேரிடர் மேலாண்மைக்கான முதல் பொறுப்பு மாநில அரசையே சாரும் என மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியாணந்த் ராய் கூறியுள்ளார். இத்தகவலை அவர் அதிமுகவின் எம்.பி ப.ரவீந்திரநாத்திற்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எம்.பி.யான ரவீந்திரநாத், நடந்து முடிந்த நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் விதி 377 இன் கீழ் கடந்த மாதம் 3 ஆம் தேதி ஒரு கோரிக்கை விடுத்தார். அதில் அவர், தமிழகத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்பை சுட்டிக் காட்டியிருந்தார்.
இம்மழையால், தமிழக விவசாயிகளின் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான ஏக்கரில் பயிரிடப்பட்ட பயிர்கள் சேதமடைந்ததைக் குறிப்பிட்டார். பொது மக்களில் பலரது வீடுகளும், பண்ணையாளர்கள் தங்களது கால்நடைகளை இழந்ததையும் அதில் தெரிவித்திருந்தார்.
இதற்காக, எம்.பி. ரவீந்திரநாத் மத்திய அரசிடம் தமிழகத்திற்கு உடனடி இடைகால நிவாரண தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இவரது கோரிக்கைக்கு மாநில விவகாரங்களுக்கான உள்துறை அமைச்சர் நித்யானந்த் ராய் பதிலளித்து கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில் மத்திய உள்துறை இணை அமைச்சரான நித்தியாணந்த் ராய் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்கக் கோரி தாங்கள் 03.12.2021 அன்று மக்களவையில் விதி எண் 377 ன் கீழ் கோரிக்கை எழுப்பிடிருந்தீர்கள்.
இந்த சூழலில் பேரிடர் மேலாண்மைக்கான முதன்மை பொறுப்பு மாநில அரசையே சாரும் என்பதை நான் தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய அரசின் விதிமுறைகளின்படி மாநில அரசுகள் பேரிடர் காலங்களில் மாநில பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.
‘கடுமையான இயற்கை பேரழிவு’ ஏற்பட்டால் மத்திய அமைச்சக குழுவின் மதிப்பீட்டின் அடிப்படையில் கூடுதல் நிவாரண நிதியானது தேசிய பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து மத்திய அரசால் வழங்கப்படுகிறது.
நடப்பு நிதியாண்டில் 2021-2022 மாநில பேரிடர் மேலாண்மை நிதியாக தமிழ்நாடு அரசிற்கு ரூ.1088 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இதில் ரூ.816 கோடி மத்திய அரசின் பங்காகும்.
மேலும், ரூ.272 கோடி மாநில அரசின் பங்காகும். இந்த மத்திய அரசின் பங்கு ரூ.816 கோடி இரண்டு தவணைகளாக ரூ.408 கோடி வீதம் தமிழக அரசிற்கு விடுவிக்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர்-நவம்பர் மாதங்களில் தமிழ்நாடு கனமழையால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து உடனடியாக மத்திய அரசு ஒரு மத்திய அமைச்சகக் குழுவை அமைத்தது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இக்குழு நவம்பர் 21 முதல் 24 ஆம் தேதி வரை மாநிலத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டது. மத்திய அமைச்சகக் குழுவின் அறிக்கை கிடைத்தவுடன், நடைமுறையின்படி கூடுதல் நிதி உதவி ஒதுக்குவது பற்றி பரிசீலிக்கப்படும்.
மாநில அரசின் முயற்சிகளுக்கு இந்திய அரசு அனைத்து ஆதரவினையும் வழங்கும் என்று நான் தங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். என்று கூறியுள்ளார்.
மக்களவையில் அதிமுகவின் ஒரே உறுப்பினராக இருப்பவர் ப.ரவீந்திரநாத். தேனி மக்களவை தொகுதியின் எம்.பி.யான அவர் ஆளும் மத்திய அரசின் கூட்டணிக் கட்சியை சேர்ந்தவர் ஆவார்.