தெளிவான உத்தி மற்றும் செயல்திட்டம் இல்லாமல் ‘சுத்தமான இந்தியா’ என்று முழங்குவதால் எந்த மாற்றமும் ஏற்படாது என்று என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.
மும்பையில் தியோனார் என்ற இடத்தில் உள்ள பரந்த குப்பை கொட்டும் வளாகத்தில் அண்மையில் குப்பைகள் தீப்பற்றி எரிந்தன. இதனால் ஏற்பட்ட புகை மூட்டத்தால் நகரின் பல இடங்களில் கடும் சுகாதார மற்றும் சுற்றச்சூழல் பாதிப்பு ஏற்பட்டது. குப்பை கொட்டப்படும் பகுதிக்கு அருகில் 6 மாத குழந்தை இறந்தது. நச்சுப் புகையால் மூச்சுத் திணறி இக்குழந்தை இறந்தாக பெற்றோர் கூறுகின்றனர். ஆனால் மாநகராட்சி நிர்வாகம் இதை மறுத்துள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இந்த குப்பை கொட்டும் வளாகத்தை செவ்வாயன்று நேரில் சென்று பார்வையிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “இந்த குப்பை கொட்டும் வளாகம் கடும் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இப்பகுதி மக்களில் பலர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ‘சுத்தமான இந்தியா’ என்ற வெறும் முழக்கத்தால் எந்த மாற்றமும் ஏற்படாது. இதற்கு தெளிவான உத்திகளும் செயல் திட்டமும் தேவை.
இந்தியாவை எவ்வாறு சுத்தமாக வைத்திருப்பது, குப்பை கொட்டும் மைதானங்களால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து மக்களை எப்படி காப்பது என்பது தொடர்பாக தொலைநோக்கு திட்டங்களோ உத்திகளோ இல்லாதது துரதிருஷ்டவசமானது.
வளர்ச்சியின் சின்னமாக மும்பை உள்ளது. இந்த குப்பை கொட்டும் வளாகம் உடனே மூடப்பட வேண்டும். இது தொடர்பாக பிரதமரும், முதல்வரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
ராகுல் காந்தியுடன் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் வந்திருந்தனர்.
நகர காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம் கூறும்போது, “இங்குள்ள குப்பைகளை அறிவியல்பூர்வமாக கையாள மாநகராட்சி தவறிவிட்டது. எனவே இதை மூடவேண்டும் என வலியுறுத்துகிறோம்” என்றார்.