இந்தியா

எங்கள் ஓட்டு நோட்டாவுக்கே: போர்க்கொடி தூக்கும் கேரள பெண்கள் ஆன்லைனில் பிரச்சாரம்

செய்திப்பிரிவு

கேரள மாநில சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி பிரதான கட்சிகள் வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் பெண்கள் மிகக் குறைந்த அளவிலேயே இடம் பெற்றுள்ளதைக் கண்டித்து தொடங்கப்பட்டுள்ள ஆன்லைன் பிரச்சாரம் வேகமாக பிரபலமடைந்து வருகிறது.

அம்மாநிலத்தின் முன்னணி பெண் செயற்பாட்டாளர்கள் இணைந்து இந்த ஆன்லைன் பிரச்சாரத்தை தொடக்கியுள்ளனர்.

அதில், கேரள மாநிலத்தில் எந்தெந்த சட்டப்பேரவை தொகுதியில் எல்லாம் பெண் வேட்பாளர்கள் களத்தில் இல்லையோ அந்தந்த தொகுதிகளில் பெண்கள் அனைவரும் நோட்டாவுக்கே வாக்களிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் உள்ள பெண்களில் 70%-க்கும் மேற்பட்ட பெண்கள் தகுதியான வாக்காளர்களாக உள்ளனர். ஆனால், சட்டப்பேரவையில் பெண்களின் பங்களிப்பு 5%-க்கும் குறைவாகவே உள்ளது என்பதே செயற்பாட்டாளர்களின் குற்றச்சாட்டு.

நோட்டா பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்பவர்களில் ஒருவரான திவ்யா திவாகரன் 'தி இந்து' ஆங்கில நாளிதழிடம் கூறும்போது, "கேரளாவின் ஆட்சி வரலாற்றுப் பக்கங்களை திருப்பிப் பார்த்தால், இதுவரை ஆட்சி செலுத்திய பிரதான கட்சிகள் பெரும்பாலானவை பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை பொருத்தவரை எங்களை ஏமாற்றவே செய்திருக்கின்றன. பெண்களுக்கு எதிரான இந்த அநீதியை எதிர்த்து நாங்கள் முதலில் குரல் கொடுப்பதே சரியானதாக இருக்கும். அதிகார மட்டத்தில் திட்டமிட்டே பெண்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்" என்றார்.

பிரச்சார கோஷம் என்ன?

தாங்கள் துவக்கியுள்ள ஆன்லைன் பிரச்சாரத்தின் கோஷம், "வேட்பாளர் பட்டியலில் 50% பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க நீங்கள் தயாராக இல்லை என்றால் நாங்களும் வாக்களிக்க தயாராக இல்லை. எங்கள் வாக்கு நோட்டாவுக்கே" என்றார் திவ்யா.

இந்த பிரச்சாரத்துக்கு கேரளாவின் பிரபல பெண் வசனகர்த்தாவான தீதி தாமோதரன், செயற்பாட்டாளர் சுல்ஃபாத், வினயா, சுதா மஞ்சரி ஆகியோர் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT