அசாமில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்காக வானத்தை நோக்கி போலீஸார் துப்பாக்கியால் சுட்டபோது, குண்டு பட்டதில் உயர் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்ததில் 11 பேர் பலியாயினர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
அசாம் மாநிலம் தின்சுகியா மாவட்டம் பன்ஜெரீ பகுதியைச் சேர்ந்த ஒருவர், அவரது மகன் மற்றும் மருமகளை சில தினங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் கடத்திச் சென்றனர். இதில் கடத்தல்காரரின் பிடியிலிருந்து மகன் தப்பிவிட்டார். எனினும், அவரது மனைவி, தந்தை ஆகிய இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக 5 பேரை பன்ஜெரீ காவல் நிலைய போலீஸார் கைது செய்துள்ளனர். இந்நிலையில், கடத்தல் கும்பலுக்கு எதிராக நேற்று போராட்டம் நடைபெற்றது.
அப்போது வெட்டுக் கத்தி, கம்பு உள்ளிட்ட ஆயுதங்களுடன் பன்ஜெரீ காவல் நிலையத்தை ஏராளமானோர் முற்றுகையிட்டனர். கைது செய்யப்பட்டவர்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு நாங்களே தண்டனை கொடுக்கப் போகிறோம் என்றும் கோஷம் எழுப்பினர். ஒரு கட்டத்தில் காவல் நிலையத்தின் மீது கற்களையும் கண்ணாடி துண்டுகளையும் வீசினர்.
இதையடுத்து கூட்டத்தினரைக் கலைப் பதற்காக போலீஸார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அப்போது, துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் அப்பகுதியில் இருந்த உயர் அழுத்த மின் கம்பி அறுந்து, போராட்டக்காரர்கள் மீது விழுந்தது.
இதில் சம்பவ இடத்திலேயே 9 பேர் உயிரிழந்தனர். மேலும் இருவர் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே, மாவட்ட காவல் துறை உயர் அதிகாரிகள், துணை ராணுவப் படையினர் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டக்காரர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
பிரதமர் இரங்கல்
அசாமில் உயர் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்ததில் பலியானவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் கேட்டுக்கொண்டதன் பேரில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அசாம் மாநில முதல்வர் தருண் கோகோயை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.