நாகாலாந்து மலைத்தொடர்களில் அரியவகை படைச் சிறுத்தை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை இல்லை என நினைக்கப்பட்ட இந்த வகை சிறுத்தை இனம், இந்தப் புகைப்படம் மூலம் இந்திய மலைத்தொடர்களில் இருப்பது உறுதியாகியுள்ளது என வனவிலங்கு ஆர்வலர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
பெரிய புள்ளிச் சிறுத்தை அல்லது படைச் சிறுத்தை (clouded leopard) என இந்த வகை சிறுத்தை, இந்தோனேசியாவின் மழைக்காடுகள் முதல் இமயமலை அடிவாரம் என தென்கிழக்கு ஆசியப் பகுதியில் மட்டுமே காணப்படும். பூனை வகையைச் சேர்ந்த விலங்கினமான இது, மிக வேகமாக அழிந்து வரும் இனமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 10,000 வரை இருந்த இந்த சிறுத்தைகள் தற்போது 1000-க்கும் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே இருப்பதாக சொல்லப்படுகிறது.
தற்போது இந்த வகை சிறுத்தை நாகாலாந்தின் மலைத்தொடர்களில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இந்திய - மியான்மர் எல்லையில் உள்ள தனமீர் சமூக காடுகளில் 3,700 மீட்டர் உயரத்தில் மேகங்களுக்கு இடையே படைச் சிறுத்தை நடந்துச்செல்லும் புகைப்படங்கள் கிடைத்துள்ளன. வனவிலங்கு ஆராய்ச்சியாளர்கள் நாகாலாந்து காடுகளில் பொருத்தியிருந்த கேமராக்களில் இந்த அரிய புகைப்படம் சிக்கியுள்ளது.
சாதாரண சிறுத்தையைவிட அளவில் சிறியதாக இருக்கும் படைச் சிறுத்தை சிறந்த மலையேற்ற விலங்காக கருதப்படுகிறது. சராசரியாக 23 கிலோ வரை மட்டுமே இருக்கும் படைச்சிறுத்தைகளுக்கு சக்திவாய்ந்த கால்கள் உள்ளன. இதுவே அவை பெரிய மலைத்தொடர்களில் ஏறிச் செல்வதற்கு ஏதுவாக உள்ளன. படைச் சிறுத்தை வேகமாக மேலே ஏறுவது மட்டுமல்லாமல், பெரிய பாதங்கள் மற்றும் கூர்மையான நகங்களைப் பயன்படுத்தி தலைகீழாக தொங்கும் திறன் கொண்டது என வியக்கிறார்கள் வனவிலங்கு ஆர்வலர்கள்.
நேஷனல் ஜியோகிராஃபிக் கணிப்பின்படி மான்கள், பன்றிகள், குரங்குகள் மற்றும் அணில் அல்லது பறவைகள் போன்றவற்றை வேட்டையாடி உண்ணும் பழக்கம்கொண்டவை படைச் சிறுத்தைகள். இதற்கு முன் சிக்கிமில் 3,720 மீட்டர், பூட்டானில் 3,600 மீட்டர் மற்றும் நேபாளத்தில் பாதுகாக்கப்பட்ட பகுதியில் 3,498 மீட்டர் உயரத்தில் மட்டுமே காணப்பட்டுள்ள இந்த சிறுத்தை தற்போது நாகலாந்து மலைக்காடுகளில் 3,700 மீட்டர் உயரத்தில் தென்பட்டுள்ளது.
2020 ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது ரண்டு பெரிய படைச் சிறுத்தைகளும், அதன் இரண்டு குட்டிகளும் தென்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. குறிப்பிட்ட இடம் மட்டுமில்லாமல் தனமீர் மலைக்காடுகளின் ஏழு இடங்களில் இவை அலைவதாக வன ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.