பஞ்சாப்: டெல்லி எல்லையில் விவசாயிகள் ஓராண்டு முகாமிட்டிருந்தனர். ஆனால், பிரதமர் மோடியால் 15 நிமிடங்கள் காத்திருக்க முடியவில்லை. எதற்காக இந்த இரட்டை நிலைப்பாடு எனக் கேள்வி எழுப்பியுள்ளார் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து.
பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக கடந்த புதன்கிழமை பிரதமர் மோடி விமானம் மூலம் பஞ்சாப் சென்றார். மோசமான வானிலை காரணமாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு காரில் செல்ல முடிவு செய்தார்.
ஆனால், விவசாயிகள் போராட்டம் காரணமாக அவரது வாகன அணி வகுப்பு மேம்பாலத்தில் 15 நிமிடத்துக்கும் மேலாக நின்றது. போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததால் தனது பயணத்தை பிரதமர் மோடி ரத்து செய்ததாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.
இதனால் காங்கிரஸ், பாஜக இடையே கடும் வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து, "டெல்லி எல்லையில் விவசாயிகள் ஓராண்டு முகாமிட்டிருந்தனர். அப்போதெல்லாம் ஊடகங்கள் எதுவும் சொல்லவில்லையே. ஆனால், பிரதமர் மோடியால் 15 நிமிடங்கள் காத்திருக்க முடியவில்லை. எதற்காக இந்த இரட்டை நிலைப்பாடு" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ஃபெரோஸ்பூர் பொதுக்கூட்டத்திற்கு மிகக்குறைந்த அளவிலேயே தொண்டர்கள் வந்திருந்ததாலேயே பிரதமர் மோடி திரும்பிச் சென்றார் என்றும் சித்து கூறினார்.