ஸ்ரீநகர்: காஷ்மீரில் முன்னாள் முதல்வர்கள் அவர்களது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக 2000-ம்ஆண்டு சிறப்பு பாதுகாப்பு குழு உருவாக்கப்பட்டது.
அதன்படி, முன்னாள் முதல்வர்களுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் காஷ்மீரின் மாநில அந்தஸ்து பறிக்கப்பட்டு இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டது.
பின்னர், 2020 மார்ச் 31-ம் தேதிஜம்மு காஷ்மீர் மறு சீரமைப்பு உத்தரவை மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டது. அதன்படி, காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் அவர்களது குடும்பத்தாருக்கு சிறப்பு பாதுகாப்பு குழு பாதுகாப்பு வழங்கும் விதியை காஷ்மீர் அரசு தவி்ர்த்தது. சிறப்பு பாதுகாப்பு குழுவை கலைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால், பரூக் அப்துல்லா, குலாம் நபி ஆசாத், ஒமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகிய 4 முன்னாள் முதல்வர்கள் விரைவில் சிறப்பு பாதுகாப்பு குழுவின் பாதுகாப்பை இழக்கஉள்ளனர்.
காஷ்மீரில் முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதை மேற்பார்வையிடும் பாதுகாப்பு ஆய்வு ஒருங்கிணைப்புக் குழு இந்த முடிவை எடுத்துள்ளதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
- பிடிஐ