இந்தியா

மெய்நிகர் கூட்டம், ஆன்லைனில் வாக்களிப்பது சாத்தியமா? - உத்தராகண்ட் உயர் நீதிமன்றம் கேள்வி

செய்திப்பிரிவு

டேராடூன்: தேர்தலை தள்ளி வைக்க கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கில், மெய்நிகர் கூட்டங்கள், ஆன்லைன் வாக்களிப்பு சாத்தியமா என்பது குறித்து பதில் அளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தராகண்ட் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தர பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல்விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான தேதி எந்நேரமும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே நாட்டில் கரோனா 3-வது அலை பரவி வருவதால் தேர்தலை தள்ளிவைக்க உத்தர விடுமாறு உத்தராகண்ட் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இது தொடர்பாக ஷிவ் பட் என்பவர் தாக்கல் செய்த மனுவில், “கரோனா காலத்தில் தேர்தல் பேரணிகளுக்கு மாற்று வழியை கண்டறிய வேண்டும் அல்லது அவற்றுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது, உத்தராகண்டில் தொடந்து தேர்தல் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன” என்று கூறியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய் குமார் மிஸ்ரா, நீபதிபதி என்.எஸ்.தைனிக் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் வழக்கறிஞர் வாதிடும் போது, “சமீபத்தில் டேராடூனில் தேர்தல் கூட்டம் நடத்திய டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலுக்கு மறுநாளே கரோனா தொற்று ஏற்பட்டது. அதிக மக்கள் ஒன்று கூடுவதால் மட்டுமல்ல, சமீபத்திய ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவக் கூடியது என்பதால் பேரணி களும் கூட்டங்களும் மக்களுக்கு ஆபத்தானவை” என்றார்.

இதையடுத்து உயர் நீதிமன்ற நீதிபதிகள், “தேர்தல் கூட்டங்களை மெய்நிகராக நடத்துவது சாத்தியமா என்பதை ஆராயுமாறு தேர்தல் ஆணையத்திடம் கேட்டுக் கொண்டனர்.

மேலும் ஆன் லைனில் வாக்களிக்கும் முறையை அமல்படுத்துவது சாத்தியமா என்றும் கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக வரும் 12-ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு தலைமை தேர்தல் ஆணை யத்துக்கு உத்தரவிட்டனர்.

- பிடிஐ

SCROLL FOR NEXT