இந்தியா

‘ஸ்டாண்ட் அப் இந்தியா’ திட்டம்: தொடங்கி வைத்தார் மோடி

பிடிஐ

தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு ரூ.1 கோடி வரை தொழில் கடன் வழங்க வகை செய்யும் ‘ஸ்டாண்ட் அப் இந்தியா’ திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.

டெல்லி அருகேயுள்ள நொய்டாவில் புதிய திட்ட தொடக்கவிழா நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பேசியதாவது: மறைந்த தலைவர் பாபு ஜெகஜீவன் ராம் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவில் ‘ஸ்டாண்ட் அப் இந்தியா’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

நாட்டுக்காக உழைத்த தலைவர்கள் எந்த கட்சியாக இருந்தாலும் அவர்களுக்கு மத்திய அரசு மரியாதை செலுத்தும். கடவுள் நம் எல்லோருக்கும் பாரபட்சமின்றி திறமைகளை அளித்துள்ளார். ஆனால் ஒரு தரப்பினருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கின்றன. தலித், பழங்குடியின மக்களுக்கு போதிய வாய்ப்புகள் கிடைப்பது இல்லை.

அவர்களுக்கு நல்ல தொடக்கத்தை, வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ‘ஸ்டாண்ட் அப் இந்தியா’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் தாழ்த்தப்பட்ட இளைஞர்கள், பெண்கள் ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை தொழில் கடன் பெறலாம்.

நாடு முழுவதும் உள்ள 1.25 லட்சம் வங்கிகளில் ஒரு பெண், ஒரு தாழ்த்தப்பட்ட இளைஞர் என தலா 2 பேருக்கு தொழில் கடன் வழங்க அறிவுறுத்தியுள்ளோம். இதன்மூலம் வேலைவாய்ப்பை தேடுவோர், வேலை வழங்குபவர்களாக மாறுவார்கள். நாட்டில் புதிதாக 2.5 கோடி தொழிலதிபர்கள் உருவாவார்கள். இத்திட்டத்தால் தலித், பழங்குடியினரின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT