இந்தியா

பிரதமர் பாதுகாப்பு விவகாரம்: தலைவர்களின் எதிர்வினையும்; நெட்டிசன்களின் ட்ரெண்டிங்கும்!

செய்திப்பிரிவு

பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணம் பாதுகாப்புக் காரணங்களால் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில், விவாதங்களும், எதிர்ப்புகளும் அதிகரித்துள்ளன.

பிரதமர் மோடியின் பாதுகாப்பு விவகாரத்தில் காங்கிரஸ் தலைமையிலான பஞ்சாப் அரசின் அலட்சியம் இருந்ததாக பாஜக குற்றம் சுமத்தியுள்ளது. இதனால் காங்கிரஸ் -பாஜக தரப்பில் மோதல் வெடித்துள்ளது. ''பஞ்சாப்பில் உள்ள காங்கிரஸ் அரசு, தங்களின் மலிவான செயல்களால், தாங்கள் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்றும், சுதந்திரப் போராட்ட வீரர்களை மதிக்காதவர்கள் என்றும் வெளிப்படையாகவே காட்டியுள்ளது'' என்று பாஜக தலைவர் ஜே.பி. நட்டா, பஞ்சாப் அரசை சாடியுள்ளார்.

இதேபோல், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, ''பிரதமரின் பயண திட்டம் போராட்டக்காரர்களுக்கு எப்படி தெரியும். அவர்களுக்கு பிரதமர் செல்லும் வழியைப் பற்றி தகவல் கொடுத்தது யார்?. இதுபோன்ற கேள்விகள் பஞ்சாப் அரசு மீதான சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது" என்று குற்றம் சுமத்தியுள்ளார். மத்திய அமைச்சர் அமித் ஷா முதல் பல்வேறு நபர்களும் தங்களின் கண்டனங்களை பஞ்சாப் அரசுக்கு எதிராக தெரிவித்து வருகின்றனர்.

பாஜக மட்டுமில்லாமல், பஞ்சாப் எதிர்க்கட்சிகளும் அரசை விமர்சித்துள்ளன. அம்மாநில முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங், ''இந்த ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு கெட்டுவிட்டது என்பதற்கு இதுவே சான்று. பஞ்சாப் மாநிலத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும், சட்டம் - ஒழுங்கை இங்கு முறையாகப் பராமரிக்கவும் வேண்டுமானால், குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவர வேண்டும் என்று நான் நினைக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

சிரோமணி அகாலிதளம் கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல், ''பஞ்சாப்பில் அரசாங்கம் செயல்பாட்டில் இல்லை என்பதற்கு இந்தச் சம்பவம் சாட்சியாக அமைந்துள்ளது. பஞ்சாப் காங்கிரஸில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல் காரணமாக முதல்வர் சன்னி சுதந்திரமாகச் செயல்படாத நிலையில் உள்ளது தெளிவாகிறது. இதனால் மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

பஞ்சாப்பில் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் ஆம் ஆத்மி, ''பிரதமரின் பாதுகாப்பில் குறைபாடு நிகழ்ந்ததை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒவ்வொரு மாநில அரசாங்கமும் அனைத்து அரசியல் வேறுபாடுகளையும் மறந்து நாட்டின் பிரதமருக்கு உயர்மட்டப் பாதுகாப்பை வழங்க வேண்டும் என்பதே எங்களின் எண்ணம்" என்று தெரிவித்துள்ளது.

விமர்சனங்கள் இப்படி இருக்க பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி இந்தக் குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்துள்ளார். ''பிரதமரின் பாதுகாப்பில் குளறுபடி ஏதும் இல்லை. பிரதமர் கலந்துகொள்ளும் கூட்டத்துக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை நான் மேற்பார்வையிட்டேன். நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு பிரதமர் ஹெலிகாப்டரில் செல்லத்தான் முதலில் முடிவானது. அவர் சாலை வழியே செல்லும் திட்டம் கடைசி நிமிடத்தில் முடிவு செய்யப்பட்டது. அது அமைதியான போராட்டம். அந்தப் போராட்டத்தால் பிரதமரின் உயிருக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை. இந்த விவகாரத்தில் எந்த விசாரணைக்கும் எங்கள் அரசு தயாராக உள்ளது" என்று விளக்கம் கொடுத்துள்ளார்.

பிரதமர் மோடி பாதுகாப்பு குறித்து, பாஜக - காங்கிரஸ் இடையே சொற்போருக்கு வழிவகுத்துள்ள நிலையில், இணையத்திலும் இந்த விவகாரம் விவாதங்களுக்கு வித்திட்டுள்ளது. ஆனால், இந்த விவாதங்களுக்கு அடித்தளமிட்டவர் பஞ்சாப் மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி. பாதுகாப்பு குறித்து தனது விளக்கத்தின் போது, ''பிரதமரின் பாதுகாப்பில் எந்தக் குறைபாடும் இல்லை. உண்மையான குறைபாடு ஆர்எஸ்எஸ் - பாஜகவிடம்தான் உள்ளது. மோடி பேரணிக்கு 7 லட்சம் பேரைக் கூட்டுவதாகச் சொல்லி ஏமாற்றிக் கடைசியில் 700 மக்களை அவர்களால் திரட்ட முடிந்தது. அதனால்தான் அவர்கள் பயணத் திட்டத்தை ரத்து செய்து திரும்பினர்" என்கிற ரீதியில் பேசியிருந்தார்.

இதை மேற்கோளிட்டு நெட்டிசன்கள் #PunjabRejectsModi என்ற ஹேஷ்டேகில் பேரணியில் காலியாக இருந்த இருக்கைகளின் காட்சியைப் பதிவிட்டு வருகின்றனர். நேற்றில் இருந்து இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது. மறுபுறம் இன்னொரு தரப்பு நெட்டிசன்கள் பஞ்சாப்பில் ஜனாதிபதி ஆட்சி வேண்டும் என்று #PresidentRuleInPunjab ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

முன்னதாக, பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி புதன்கிழமை விமானம் மூலம் பஞ்சாப் சென்றார். மோசமான வானிலை காரணமாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு காரில் செல்ல முடிவு செய்தார். ஆனால், போராட்டம் காரணமாக அவரது வாகன அணிவகுப்பு மேம்பாலத்தில் சுமார் 20 நிமிடங்கள் வரை நின்றது. போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததால் தனது பயணத்தை பிரதமர் மோடி ரத்து செய்ததாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், இது தொடர்பாக மாநில அரசிடம் விளக்கமும் கேட்கப்பட்டுள்ளது. அதேநேரம், பிரதமர் மோடி குடியரசுத் தலைவர் இந்த விவகாரம் தொடர்பாக இன்று சந்தித்துப் பேச இருக்கிறார்.

SCROLL FOR NEXT