இந்தியா

கரோனா நோயாளிகள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்வதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மிதமான மற்றும் அறிகுறிகள் இல்லாத கரோனா நோயாளிகள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்வதற்கான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் ஒமைக்ரான் பரவல் வேகம் எடுத்திருப்பதால், கரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில், மிதமான மற்றும் அறிகுறிகள் இல்லாத கரோனா நோயாளிகள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். இதற்காக திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது: எந்த வகை அறிகுறியும் இல்லாத, அதேநேரம் பரிசோதனையில் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் அறிகுறிகள் இல்லாத கரோனா நோயாளிகளாக வகைப்படுத்தப்படுவார்கள். இவர்களுக்கு உடல் ஆக்சிஜன் அளவு 93 சதவீதத்துக்கு மேல் இருக்கும்.

அதேபோல, மூக்கு, தொண்டை,மூச்சுக் குழாயில் மட்டும் தொற்றுஏற்பட்டு காய்ச்சல் அல்லது காய்ச்சல் இல்லாமல் இருக்கும் நோயாளிகள் மிதமான கரோனாநோயாளிகளாக வகைப்படுத்தப் படுவர். இவர்களுக்கும் 93 சதவீதத்துக்கு மேல் உடல் ஆக்ஜிசன் அளவு இருக்கும். மேற்கூறிய இரு வகை கரோனா நோயாளிகளும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளலாம்.

குடும்ப உறுப்பினர்களிடமி ருந்து தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு தனி அறையில் இருக்க வேண்டும். நோயாளிகள் கட்டாயம் 3 அடுக்கு முகக்கவசம் அணிய வேண்டும். 8 மணி நேரத்துக்கு ஒரு முறை முகக்கவசத்தை மாற்ற வேண்டும். பயன்படுத்திய முகக்கவசத்தை பல துண்டுகளாக வெட்டி அப்புறப்படுத்த வேண்டும்.

நோயாளிகளை பராமரிப்பவர் தனி அறைக்குள் நுழையும் போது இருவருமே என்.95 முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். கட்டாயம் இரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவராக இருக்க வேண்டும்.

நோயாளிகள் தண்ணீர் மற்றும் அதிக அளவு நீர்ச்சத்து கொண்ட பானங்களை அடிக்கடி அருந்த வேண்டும். அடிக்கடி சோப்பு நீரில் கை கழுவ வேண்டும்.

நோயாளிகள் பயன்படுத்திய பாத்திரங்களை மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது. நோயாளிகள் அடிக்கடி தொடும் இடங்களை சுத்தப்படுத்த வேண்டும். பல்ஸ் ஆக்சிமீட்டர் மூலம் ஆக்சிஜன் அளவையும் வெப்பமானி மூலம் உடல் வெப்பநிலையையும் அடிக்கடி பரிசோதிக்க வேண்டும். இதில் ஏதேனும் மாறுபாடு தெரிந்தால் சிகிச்சை அளிக்கும் மருத்துவ அதிகாரிக்கு தெரியப்படுத்த வேண்டும்.

60 வயதுக்கு மேற்பட்டவர்கள், சர்க்கரை நோய், இதய நோய், நுரையீரல், கல்லீரல், சிறுநீரக பாதிப்பு கொண்டவர்கள் மருத்துவ அதிகாரியின் அனுமதிக்கு பின்னரே வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- பிடிஐ

SCROLL FOR NEXT