இந்தியா

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு: 2 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு இன்று விசாரிக்கும்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு (இடபிள்யூஎஸ்) மருத்துவ மேற்படிப்பில் 10% இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கில் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு பதில் 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடத்தவுள்ளது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு மருத்துவ மேற்படிப்பில் 10% இடங்களை ஒதுக்க மத்திய அரசு ஆணை பிறப்பித்தது. ஆனால், இதற்கு இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் இடம் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளது.

இந்நிலையில், மருத்துவக் கல்லூரி முதல் ஆண்டு வகுப்பில்10% இடங்களை பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு முற்பட்டது. இதையடுத்து, அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன் காரணமாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற இருந்த நீட் கவுன்சலிங் தள்ளிவைக்கப்பட்டது.

இதனிடையே, ஆண்டுக்கு ரூ.8 லட்சம் வருமானம் உள்ளவர்கள் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பொதுப் பிரிவினராக கருதப்படுவர் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்தது.

இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சந்திரசூட், ஏ.எஸ். போபண்ணா, சூர்யகாந்த் ஆகிய 3 பேர் கொண்ட அமர்வு விசாரித்து வந்தது. இந்நிலையில், இந்த வழக்கை ஜனவரி 3, 4 ஆகிய தேதிகளில் விரைந்து விசாரிக்க வேண்டும் என மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். இதனிடையே, இந்த வழக்கு மேற்கண்ட 3 நீதிபதிகள் கொண்ட அமர்வால் நேற்று விசாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், 3 நீதிபதிகள் கொண்ட அமர்வை இரண்டாக குறைத்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா நேற்று புதிய உத்தரவு பிறப்பித்தார். அதன்படி இந்த வழக்கை நீதிபதிகள் சந்திரசூட், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் கொண்ட இரு நீதிபதிகள் அமர்வுஇன்று விசாரணை நடத்தவுள்ளது. அதேபோல் மருத்துவ மேற்படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்டோ ருக்கான இடஒதுக்கீடு குறித்த மனுவும் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

- பிடிஐ

SCROLL FOR NEXT