இந்தியா

ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தல்: கர்நாடகாவில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு; பள்ளி, கல்லூரிகள் மூடல்

செய்திப்பிரிவு

பெங்களூரு: நாளுக்கு நாள் அதிகரித்துவரும் ஒமைக்ரான் அச்சுறுத்தலால் கர்நாடகாவில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. வரும் வெள்ளிக்கிழமைக்குப் பின்னர் வரும் வார இறுதி நாளிலிருந்து இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது.

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. அந்தவகையில் இந்தியாவிலும் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒமைக்ரான் பரவலும் அதிகமாக உள்ளது.

இந்நிலையில் கர்நாடகாவில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமலுக்குக் கொண்டு வரப்படுகிறது.

இது குறித்து நேற்றிரவு செய்தியாளர்களை சந்தித்த மாநில வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.அசோக் கூறியதாவது:

கர்நாடகாவில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 149 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. முன்பைவிட பலமடங்கு அதிகமாக ஒமைக்ரான் பரவுகிறது. பெங்களூருவில் ஒமைக்ரான் தொற்று பரவல் அதிகமாக உள்ளது. கடந்த மூன்று நாட்களில் புதிதாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,053 என்றளவில் உள்ளது.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஏற்கெனவே இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை முதல் இரவு 10 மணி முதல் திங்கள் காலை 5 மணி வரை வார இறுதி நாட்கள் ஊரடங்கு அமலுக்கு வரும்.
அதுபோல், கேரளா, கோவா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து வருவோர் ஆர்டி பிசிஆர் பரிசோதனை செய்து கோவிட் நெகட்டிவ் சான்றிதழுடன் வந்தால் மட்டுமே மாநிலத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

பள்ளி, கல்லூரிகள் மூடல்: கரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள், மருத்துவ, துணை மருத்துவக் கல்லூரிகள் ஆகியன வரும் வியாழக்கிழமை தொடங்கி இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டிருக்கும். ஆயினும் 9. 10, 11, 12 வகுப்பு மாணவர்கள் நேரடி வகுப்புக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கேளிக்கை விடுதிகள், மதுபானக் பார்கள், உணவகங்கள், சினிமா தியேட்டர்கள், நீச்சல் குளங்கள், திடல்கள் ஆகியன 50 சதவீத ஆட்களுக்கு அனுமதியோடு இயங்கும். உணவகங்கள், மதுபான பார்கள் ஆகியனவற்றில் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். திருமண நிகழ்வுகளில் 200 பேருக்கு மேல் அனுமதியில்லை. அதுவே மூடிய அரங்கில் நடைபெறும் திருமண விழா என்றால் 100 பேருக்கு மட்டுமே அனுமதி.

இவ்வாறாக அமைச்சர் தெரிவித்தார்.

முதல், மற்றும் இரண்டாவது அலையின்போது 15 நாட்களுக்கு ஒருமுறை இரட்டிப்பான கரோனா தொற்று இப்போது ஓரிரு நாட்களில் இரண்டு மடங்காகிறது என மாநில சுகாதார அமைச்சர் டி.கே.சுதாகர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT